கோவில் விழாவில் சண்டை போட்ட யானைகள்: பலியான 3 அப்பாவி உயிர்கள்!

Published On:

| By Kumaresan M

கேரளாவில் மதம் கொண்ட யானைகள் மிதித்ததில் 3 பேர் பலியானார்கள். 35 பேர் காயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகேயுள்ள மணக்குளங்காரா கோவில் திருவிழா நேற்று (பிப்ரவரி 14) நடந்தது. இந்த விழாவில் ஏராளமான யானைகள் கலந்து கொண்டன.

கோவில் அருகே வெடிகள் வெடிக்கப்பட்டுள்ளது. இதனால், மிரண்டு போன பீதாம்பரன் என்ற யானையுடன் கோகுல் என்ற யானை சண்டை பிடித்தது. இரு யானைகளும் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டன.

இதில், கோகுல் யானை அங்குள்ள கட்டடத்தின் மீது சரிந்து விழுந்தது. அந்த கட்டடமும் சேதமடைந்தது. அப்போது, கூட்டம் அங்குமிங்கும் சிதறி ஓடியது. இந்த சமயத்தில் யானைகள் மிதித்ததில் லீலா, ராஜன் , அம்முக்குட்டி ஆகிய 3 பேர் பலியானார்கள். 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து , கேரள மாநில தலைமை வனப்பாதுகாவலர் கீர்த்தி அந்த கோவிலுக்கு விசிட் செய்தார். மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், “எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் யானைகளை கோவில் விழாவில் பங்கேற்க வைத்துள்ளனர். ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட இடைவெளி கொடுத்து நிற்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம். அதையும் , பின்பற்றவில்லை. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். ‘

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share