திருடுபோனதா பயணிகளின் தகவல்: ரயில்வே சொல்வது என்ன?

Published On:

| By Prakash

இணையதளத்திலிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இந்திய ரயில்வே மறுத்துள்ளது.

ஹேக் ஆன டெல்லி எய்ம்ஸ்

தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம், கடந்த நவம்பா் 23ஆம் தேதி செயல் இழந்தது. சர்வர் பழுதடைந்ததால், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், டிஜிட்டல் மருத்துவச் சேவைகள், ஸ்மார்ட் லேப், பில்லிங், நோயாளிகள் குறித்த அறிக்கை தயாரித்தல், முன்அனுமதிச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டிருந்த முக்கியமான அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான நோயாளிகளைப் பற்றிய விவரங்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும், அத்தரவுகளை திரும்ப வழங்க வேண்டுமென்றால் ரூ.200 கோடி தர வேண்டும் என்று ஹேக்கர்கள் நிபந்தனை விதித்ததாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இந்த தகவலை டெல்லி காவல் துறை மறுத்திருந்தது. இதுகுறித்து தேசிய தகவல் மையத்தின் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியதுடன், 20 நாட்களுக்குப் பிறகு சர்வர்களையும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றிகரமாக மீட்டெடுத்தனர்.

Passenger information stolen Railways answer

”இந்த சைபர் தாக்குதல், சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது, அங்கிருந்து ஹேக்கர்கள் சர்வர்களில் ஊடுருவியுள்ளனர்”என அவர்கள் தெரிவித்தனர்.

ரயில்வேயிலும் திருடப்பட்டதாக தகவல்

இந்த நிலையில், எய்ம்ஸ் சர்வர் ஹேக் செய்யப்பட்டது போன்று இந்திய ரயில்வே துறையின் இணையதள பயனர் விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் இந்த தகவல் திருட்டை மேற்கொண்டவர்கள் தங்களை ஷேடோ ஹேக்கர்கஸ் என அழைத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் திருட்டில் பயணிகளின் பெயர், இணைய முகவரி, அலைபேசி எண், பாலினம், முகவரி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பயணிகளின் பயண விவரங்களின் ஸ்கீரின் ஷாட்களை வெளியிட்டுள்ள ஹேக்கர்கள், இந்த விவரங்கள் விற்பனைக்கு வரும் என தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரத்தில் இத்தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது.

Passenger information stolen Railways answer

மறுத்த ரயில்வே

இதுகுறித்து இந்திய ரயில்வே, ‘ஐஆர்சிடிசி அமைப்பிலும் சரி, சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவேயில்லை. ஹேக்கர்களிடமிருந்து கிடைத்திருக்கும் சில தகவல்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதன் பேட்டர்ன், ஐஆர்சிடிசி தகவல் பதிவு அமைப்பின் பேட்டர்னுடன் ஒத்துப்போகவில்லை. எனவே, விற்பனைக்கு வந்திருக்கும் தகவல்கள் இந்திய ரயில் பயணிகளுடையது அல்ல” எனத் தெரிவித்துள்ளது.

எனினும், ஐஆர்சிடிசி, தனது வணிக நிறுவனங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க உத்தரவிட்டிருப்பதுடன், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளது. இந்திய ரயில்வே துறையில் இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு 90 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

கோவைக்கு வந்த கொரோனா!

தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்: நடிகை அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share