ரம்மி விளையாட்டுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி – நிர்மலா சீதாராமன்

Published On:

| By Monisha

28 percent GST on online games

ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்களுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவிகிதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில் இனி 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவிகித வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக தெரிவித்தார். ‘புற்றுநோய்க்கான மருந்துகள், அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செயற்கை ஜரிகைக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் இனி 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜிஎஸ்டி வரி பாக்கி ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ராஜ்

மன்னிப்பு கேட்டால் மீண்டும் சேரலாம்! எடப்பாடியின் ’கெத்து’ அறிவிப்பு!

மாவீரன் படத்தில் விஜய்சேதுபதி குரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share