அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி!
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 22 பேர் படுகொலை செய்யப்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் நேற்று (அக்டோபர் 25) இரவு சக்தி வாய்ந்த உயர் ரக துப்பாக்கியுடன் ஒருவர் வலம் வந்தார்.
அங்குள்ள உணவு விடுதி, வால்மார்ட் மார்க்கெட் மற்றும் விளையாட்டு அரங்கில் நுழைந்த அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதுகுறித்து தகவலறிந்த மைனே மாநில காவல்துறை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “லெவிஸ்டனில் துப்பாக்கி சுடுதலில் ஒருவர் ஈடுபட்டு வருகிறார். தங்குமிடத்தில் வீட்டை பூட்டிக்கொண்டு பத்திரமாக இருங்கள். வெளியே வரவேண்டாம். உங்கள் பகுதியில் எதாவது சந்தேகத்துக்கு இடமான நபர்கள் காணப்பட்டால் 911 என்ற எண்ணுக்கு அழைத்து தெரியப்படுத்தவும்” என்று பதிவிட்டது.
அதனைத்தொடர்ந்து மர்ம நபர் தலைமறைவானார். எனினும் இந்த கொடூரத் தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக மைனே மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து மைனே ஆளுநர் ஜேனட் மில்ஸ், செனட்டர்கள் அங்கஸ் கிங் மற்றும் சூசன் காலின்ஸ் மற்றும் காங்கிரஸின் ஜாரெட் கோல்டன் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். அப்போது இந்த தாக்குதல் மீதான அரசின் நடவடிக்கைக்கு முழு ஒப்புதல் அளித்தார்.
கொலையாளி அடையாளம் காணப்பட்டார்!
இதற்கிடையே துப்பாக்கி சூட்டின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அந்த மர்ம நபரை மைனே காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், “லெவிஸ்டனில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமானவர் ராபர்ட் ஆர் கார்டு என்றும், அவர் துப்பாக்கிச் சூடு பயிற்சி நிபுணராக பணியாற்றியவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
அவரை கண்டால் மக்கள் நேரிடையாக அணுக வேண்டாம். எங்களை தொடர்பு கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி பொதுமக்களின் உயிர்பலி வாங்கிய ராபர்டை பிடிக்க மைனே காவல்துறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
டீ பிரியர்கள் கவனத்திற்கு.. டீ குடிக்கும் போது இவற்றை சேர்த்து சாப்பிட வேண்டாம்!