Afghanistan earthquake 2000 dead

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : 2000 பேர் பலி!

இந்தியா

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் நேற்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெராட் என்ற பகுதியின் வடமேற்கில் 40 கிமீ மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 6.3, 5.9 மற்றும் 5.5 ரிக்டர் என 5முறை நிலநடுக்கம் ஏற்பட்டன. இதில் வீடுகள் முற்றிலுமாக உருக்குலைந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி முதல்கட்டமாக 320 பேர் பலியானதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது வரை 2000 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

கோர்யான், சிந்தா ஜன் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள 12 கிராமங்கள் முற்றிலும் பேரழிவைச் சந்தித்துள்ளன என்றும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

ஹெராத் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஷகோர் சமாதி கூறுகையில், “ நேற்று நண்பகல் குறைந்தது 5 முறை நிலநடுக்கமும், பல முறை அதிர்வுகளும் ஏற்பட்டன. வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
தொடந்து நிலநடுக்கங்கள் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் காரணமாக ஹெராத்தில் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்ததால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விவரங்களைப் பெறுவது கடினமாக உள்ளதாக மீட்பு குழுவினர் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் நிலநடுக்கம் தொடர்பான காணொளிகள் பரவி வருகின்றன. அதில், நூற்றுக்கணக்கான மக்கள் ஹெராத் நகரில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெளியே தெருக்களில் நிற்பதை காணமுடிகிறது.

ஹெராத் மாகாணம் ஈரான் எல்லை பகுதியில் உள்ளது. இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள ஆப்கானிஸ்தான் மாகாணங்களான ஃபரா மற்றும் பட்கிஸ் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான, மலைப்பாங்கான பகுதியில் நிலநடுக்க ஏற்பட்டது. அப்போது கல், மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. இது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமாக நிலநடுக்கம் என்று சொல்லப்பட்டது. இதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.

கடந்தவாரம் நேபாள், இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

பிரியா

தொடரும் பட்டாசு விபத்துகள்: ஒசூரில் 14 பேர் பலி!

பிரசாந்த் நீலின் NTR 31 பட அப்டேட்!

இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் மஸ்தான்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *