கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த 20 எம்.பிக்கள் இன்று (ஜூலை 29) சென்று பார்வையிட உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி சமூக மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடியின மக்கள் கடந்த் மே 3ஆம் தேதி பேரணி நடத்தினர்.
அப்போது இரு சமூகத்தினரிடையே பெரிய மோதல் ஏற்பட்டது. அது கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி இரு குக்கி பழங்குடியின பெண்களை மெய்தி சமூக ஆண்கள் ஆடையின்றி நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடந்த ஒருவார காலமாக இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது.
இந்தநிலையில் இரண்டு நாள் பயணமாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை பார்வையிட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 20 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று செல்கின்றனர்.
மணிப்பூருக்கு செல்லும் 20 எம்.பிக்களின் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. அதில்,
காங்கிரஸ் சார்பில் அதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், புலோ தேவி நேட்டம்,
திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சுஷ்மிதா தேவ்,
திமுக சார்பில் கனிமொழி,
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், ரவிக்குமார்,
ஜேடியூ சார்பில் ராஜிவ் ரஞ்சன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே,
சிவேசேனா சார்பில் அரவிந்த் சவந்த்,
ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுஷில் குப்தா,
தேசியவாத காங்கிரஸ் சார்பில் முகமது பைசல்,
ஆர்.எஸ்.பி சார்பில் பிரேம சந்திரன்,
ஜே.எம்.எம் சார்பில் மஹூவா மாஜி,
ஆர்.எல்.டி சார்பில் ஜெயந்த் சிங்,
எஸ்.பி சார்பில் ஜாவத் அலி கான்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது பஷீர்,
கம்யூனிஸ் சார்பில் சந்தோஷ் குமார்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ரஹீம் ஆகிய 20 பேர் இன்று மணிப்பூர் செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்றும் நாளையும் மாநிலத்தில் கலவரம் பாதித்த இடங்களுக்குச் சென்று நிலையை நேரில் கண்டறிய திட்டமிட்டுள்ளனர். கலவரத்தால் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களையும் இவர்கள் சந்திக்கிறார்கள். மேலும் மோதலில் ஈடுபட்டுள்ள இரு சமூகத்து மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
நான் பண வசதியில்லாதவன், எவ்வாறு தான தர்மங்கள் செய்யமுடியும்?