மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு முறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் விழுவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) தேர்தல் நடைபெறுகிறது.
கேரளாவில் உள்ள் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அப்போது 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாகும்படி மென்பொருள் இருப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக காசர்கோடு மக்களவைத் தொகுதியின் இடதுசாரி வேட்பாளரும், சி.பி.எம் தலைவருமான எம்.வி.பாலகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் அதிகாரி இன்பசேகரிடம் புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாக புகார் அளித்துள்ளது.
9 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்காக ஒரு முறை பட்டனை அழுத்தும்போது பா.ஜ.க. தவிர மற்றவர்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு மட்டுமே வருகிறது என்றும் பா.ஜ.க.வுக்கு மட்டும் 2 ஒப்புகைச் சீட்டு வருகிறது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
உச்ச நீதிமன்றத்தில் 100 சதவிகிதம் விவிபேடு ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் மனுதாரர்கள் சார்பில், இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு, பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானது தொடர்பாக கேள்வி எழுப்பியது.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேந்தர் சிங்கிடம், இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்யுமாறு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இந்த புகாருக்கு உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவாகிறது என்று வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நடிகர் அஜித் மகளா இது?.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!
இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘டெலிட்’ செய்த யுவன்?… ரசிகர்கள் அதிர்ச்சி..!