குஜராத்தில் இரண்டு துணை ராணுவப் படை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் குஜராத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்தநிலையில், தேர்தல் பணிக்காக மணிப்பூர் மாநிலத்திலிருந்து குஜராத் மாநிலம் போர்பந்தர் வந்திருந்த இரண்டு துணை ராணுவப் படையினரை உடன் பணியாற்றும் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போர்பந்தர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரியுமான ஏ.எம்.சர்மா கூறும்போது, “நேற்று (நவம்பர் 26) மாலை போர்பந்தர் அருகே உள்ள துக்டா கோசா கிராமத்தில் துணை ராணுவப் படையினர் தங்கியிருந்த முகாமில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மணிப்பூரைச் சேர்ந்த தோபியா சிங், ஜித்தேந்திர சிங் ஆகிய இரண்டு துணை ராணுவப் படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், சோரதிக், ரோஹிகானா ஆகிய இரண்டு துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். ஒருவருக்கு வயிற்றிலும், மற்றொருவருக்குக் காலிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.
உடனடியாக அவர்கள் போர்பந்தர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக ஜாம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

துணை ராணுவப்படையினரை துப்பாக்கியால் சுட்டது மணிப்பூரைச் சேர்ந்த துணை ராணுவ படை அதிகாரி எஸ்.இனவுச்சாசிங் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இனவுச்சாசிங் ஏகே 47 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.” என்றார்.
குஜாரத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், துணை ராணுவப்படையினர் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
ஆற்றில் குளித்த இளைஞன் – இழுத்து சென்ற முதலை
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பருப்பு, கிழங்கு உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்துவது உண்மையா?