தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று (ஜூலை 18) நடைபெற்றது.
நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வை எழுத 18,72,343 பேர் விண்ணப்பித்திருந்தனர். 17,78,725 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1,42,286 பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் சென்னையில் 33 மையங்கள் உட்பட 59 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 1.42 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் கடும் கெடுபிடி
மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வில் பங்கேற்க மாணவர்கள் காலை 11.40 மணியில் இருந்து வரலாம் என அறிவிக்கப்பட்டதால் 11 மணிக்கே மாணவர்கள் தேர்வு மையங்களில் திரள தொடங்கினர். முழுமையான சோதனைக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்து செல்ல தேர்வு மைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதே போன்று முழுக்கை சட்டை, பெல்ட், காப்பு உள்ளிட்டவற்றை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு அவற்றை அகற்றிவிட்டு உள்ளே அனுமதித்தனர்.
மூக்கில் ரத்தம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் உள்ள டெல்டா பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இங்கு 144 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 மாணவிகள் மூக்குத்தி அணிந்திருந்தனர். அவர்களிடம் மூக்குத்தியை கழற்ற சொன்னபோது, நன்னிலம் பூந்தோட்டத்தைச் சேர்ந்த மாணவி கழற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளானார். எப்படியாவது கழற்றிவிட வேண்டும் என்று முற்பட்டு இழுத்ததில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதையடுத்து மாணவியின் தந்தை, லெட்சுமாங்குடி தனது மகளை அடகு கடைக்கு அழைத்துச் சென்று மூக்குத்தியை கழற்றிவிட்டு மீண்டும் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்தார்.
மாணவர்களுக்கு புதிய மாஸ்க்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாஸ்க் அணிந்து தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்களிடம் அவற்றை வெளியிலேயே அகற்றிவிட்டு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஏற்கனவே தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டது போல ஒவ்வொரு மாணவருக்கும் புதிய N95 வகை மாஸ்க்குகள் விநியோகிக்கப்பட்டன.
68 வயதில் மருத்துவராகும் ஆசை
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள பிரிஸ்ட் பல்கலைக் கழகத்தில் 68 வயது முதியவர் ராமலிங்கம் நீட் தேர்வு எழுதினார். சிந்தாமணி பகுதியில் வசித்து வரும் அவர் கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு கண்டதாகவும் அதனை நிறைவேற்றுவதற்காக 68 வயதில் நீட் தேர்வை எழுதுவதாகவும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வுக்காக தனியாக பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என கூறிய ராமலிங்கம், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவே இந்த தேர்வை எழுதுவதாக தெரிவித்தார்.
70 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்
கோயம்புத்தூர் மாவட்டம் விநாயகபுரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் பிரின்ஸ் மாணிக்கமும் நீட் தேர்வை எழுதியுள்ளார். 1968-ல் ப்ரீ யுனிவர்சிட்டி படிப்பை முடித்த அவர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பிஎஸ்சி அக்ரிகல்சர் படிப்பை முடித்துள்ளார். ஆனால், மருத்துவம் படிக்க முடியவில்லை என்கிற தனது கவலையை நீக்குவதற்காக நீட் தேர்வு எழுதுவதாக அவர் தெரிவித்தார். 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை படித்தவர்கள் வெறும் 3 மணி நேர தேர்வை கண்டு அஞ்சக்கூடாது என அவர் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தார்.
ஒன்றாக தேர்வு எழுதிய தந்தை, மகன்
இதே போல திருவாரூர் வேலுடையார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் தந்தை மகன் ஒன்றாக தேர்வு எழுதினர், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த காத்தையன் 1992-ம் ஆண்டு கோட்டூர் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தவர். இவரது மகன் குமரன் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
டாக்டராக வேண்டும் என்கிற கனவை நனவாக்குவதற்காக கணிதம், அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை படித்து வந்ததாக காத்தையன் கூறினார். தற்போது தனக்கு 50வயது ஆவதாகவும் 5 ஆண்டுகள் மருத்துவம் படித்தாலும் அடுத்த 5 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் எளிது; கட்-ஆஃப் உயர வாய்ப்பு
நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவு எளிதாக இருந்ததாகவும் ஆனால், கேள்விகள் நீளமாக இருந்ததால் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர். மேலும், நீட் தேர்வில் முதல் முறையாக ASSERTION&REASONING வகை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான கட் ஆஃப் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
720 மதிப்பெண்ணுக்கு நடந்த இந்த தேர்வில் தவறான வினாக்களுக்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
~அப்துல் ராபிக் பகுருதீன்