தென்கொரியாவில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
50 பேருக்கு மாரடைப்பு
கொரோனா பாதிப்பின் காரணமாக 2 வருடங்களுக்குப் பிறகு சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகளின்றி தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டம் மிக விமரிசையாக நேற்று (அக்டோபர் 29) கொண்டாடப்பட்டது.
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள இத்தோவான் என்ற இடம் ஹாலோவீன் கொண்டாட்டத்திற்குப் பிரபலமான இடமாக இருந்து வருகிறது.
ஹாலோவீன் என்பது பேய், ஆவி, எலும்புகூடு, மற்றும் மாறுவேட ஆடை அலங்காரம் செய்துகொண்டு வீடு வீடாக சென்று, ஹேப்பி ஹாலோவீன் டே என்று குரல் எழுப்புவார்கள். இந்த அணிவகுப்புகள் காண்பவரை மிரளச்செய்யும்.
அதன்படி தென்கொரியாவில் நேற்று ஹாலோவீன் ஆடைகளை அணிந்து கொண்டு சாலைகளில் ஏராளமானோர் ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலத்தைக் காண்பதற்காக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சியோலில் கூடினர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால், மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சரியாக 10.20 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.50) நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து காயமடைந்தவர்களை மீட்பதற்காக 520 தீயணைப்பு வீரர்கள், 1,100 போலீஸ் அதிகாரிகள், 70 அரசு ஊழியர்கள் என மொத்தம் நாடு முழுவதிலிருமிருந்து 1,700 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மயங்கி விழுந்த மக்களை மீட்டு சிபிஆர் முறையில் முதலுதவி அளித்தனர்.
சிபிஆர் என்பது வாய் மீது வாய் வைத்து மேற் கொள்ளப்படும் சுவாசத்தை மீட்டெடுக்கும் முறை, மற்றும் மீண்டும் மீண்டும் மார்பை அழுத்தி இதயத் துடிப்பை கொண்டு வருவது ஆகும்.
இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் உடனடியாக அனைவரையும் மீட்க முடியவில்லை. இதில் சம்பவ இடத்திலேயே 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அவசர ஆலோசனைக் கூட்டம்
இந்த சோக நிகழ்வு குறித்து தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி ”பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து அதிபர் யூன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சியோல் மைய பகுதியில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு.
இதுவரை பலி எண்ணிக்கை 150-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை உயர் அதிகாரி ’சோய்’ கூறுகையில், ”உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் 19 பேர் வெளிநாட்டவர் ” என்றார்.
பார்ப்பதற்கே அதிர்ச்சியாக இருந்தது
இந்த கூட்ட நெரிசலிலிருந்து தப்பிய ஒருவர் கூறுகையில், “ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டதால் பலர் கீழே விழுந்தனர். அனைவரும் எனக்கு உதவுங்கள் என்று கூச்சலிட்டனர். கீழே விழுந்து சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு சுமார் 1.30 மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது” என்றார்.
இத்தோவான் பகுதியைச் சேர்ந்த ’ஹ்வாங் மின்-ஹியோக்’ என்ற நபர் கூறுகையில், “சாலைகளில் வரிசையாக இருந்த உடல்களைப் பார்த்தது அதிர்ச்சியாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் தெருக்களில் அதிகமாகக் காணப்பட்டார்கள். அவர்கள் காயமடைந்தவர்களுக்கு சிபிஆர் அளித்துக் கொண்டிருந்தனர்” என்றார்.
இந்த துயரமான சம்பவத்திற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வேதனையைத் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில், “இரவு சியோலில் இருந்து பயங்கரமான செய்தி வந்தது. இந்த மிகவும் துயரமான நேரத்தில் எங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் தென்கொரிய மக்களுடன் தான் இருக்கிறது” என்றார்.
தென்கொரியாவில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிப் பார்ப்பவர்கள் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
மோசமான பேரழிவு
2014 ஆம் ஆண்டு தென்கொரியாவில் ஏற்பட்ட ஒரு பேரழிவு இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்தது. 304 பேர் கப்பலில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். மூழ்கிய கப்பல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்டது.
தென்கொரிய வரலாற்றில் இதுவே மோசமான பேரழிவாகும். அதற்கு முன்னதாக 2005 ஆம் ஆண்டு தென் கொரியாவின் தெற்கு நகரமான சாங்ஜூவில் நடந்த பாப் இசை நிகழ்ச்சியில் 11 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் நடந்த கலவரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் மக்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது.
மோனிஷா
செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட அண்ணாமலை