நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, 150 விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நாடான நமீபியா, எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் பாதிக்கும் மேலான மக்கள் பஞ்சத்தில் உள்ளனர். இந்த சூழலைச் சமாளிக்க வனவிலங்குகளை வேட்டையாடலாம் என நமீபிய அரசு விசித்திர முடிவை எடுத்துள்ளது.
இதற்காக 723 மிருகங்களைப் பலியிடத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சாணத்தின் மூலம் வனத்தையே உருவாக்கிடும் யானையும் அந்த விலங்குகளின் பட்டியலில் இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வேதனையை அளித்துள்ளது. 30 நீர் யானைகள், 80 யானைகள், 50 மான்கள், 300 வரிக்குதிரைகள், 100 கொம்புடைய மான்கள், 100 வைல்ட்பீஸ்டுகள் 100 காண்டாமிருங்களை கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா கண்டத்தில் நான்காவது பெரிய நதியான ஜாம்பாசி நதியை ஒட்டியுள்ள நாடுகளுக்கு, கடந்தாண்டு தேவையான மழை பொழிவில் 15 சதவீதம் கூட கிடைக்கவில்லை. இதுவே வறட்சிக்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதல் கட்டமாக 150 வனவிலங்குகள் கொல்லப்பட்டு மக்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. நமீபிய அரசின் இந்த செயலுக்கு பேட்டா அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எனினும், நமீபிய அரசு தன் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. விலங்குகளால் நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போவதாகவும் மனித- விலங்குகள் மோதலை தடுக்கவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகரித்து வரும் யானைகளின் எண்ணிக்கை மனிதர்களுக்குச் சிக்கல்களை உருவாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. ஆகையால் யானைகளை வேட்டையாடும் திட்டத்தினை நிறைவேற்றுகிறோம். தன் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் குடிமக்களின் நலனுக்காக இதை செய்வதாகவும் நமீபிய அரசு கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அமெரிக்காவில் இருந்து அரசு பணி : ஸ்டாலின் ட்வீட்!
Paralympics 2024: பாரிஸில் புதிய சாதனை படைத்த இந்தியா!