நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் ஆறு குட்டிகள் உட்பட 10 புலிகள் இறந்த நிலையில், இந்தியாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை 146 புலிகள் இறந்துள்ளதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இறப்பு என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த புலிகள் இறப்புக்கான சரியான காரணங்களை அறிய, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையக்குழுவினர் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.
உலகிலேயே 3,000 புலிகளுடன் மிகப்பெரிய புலிகளைக் கொண்ட நாடான இந்தியாவில், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஒன்பது மாதத்தில் 24 புலி குட்டிகள் உள்பட 146 புலிகள் இறந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்,
இது புலிகளின் இனப்பெருக்கத் திறனை நேரடியாக பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கையிலான புலிகள் இறப்பு எனவும், 2012இல் 88 புலிகள், 2013இல் 68, 2014இல் 78, 2015இல் 82,
2016இல் 121, 2017இல் 117, 2018இல் 101, 2019இல் 96, 2020இல் 127, 2021இல் 127, 2022இல் 121 புலிகள் இறப்புகள் பதிவாகியுள்ளன எனவும்,
புலிகள் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை எனவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
புலிகள் இறப்புக்கான காரணங்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ இருக்கலாம்.
இயற்கைக்கு மாறான காரணங்களில் விபத்துகள் காரணமாக ஏற்படும் மரணங்கள், புலிகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களினால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும். இதில் வேட்டையாடுதல் என்பது தனி.
பொதுவாக இந்த ஆண்டு புலிகளை வேட்டையாடுதல் வழக்குகள் அதிகரித்திருப்பதாகவும், புலிகளின் தோல்கள் மற்றும் நகங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்ததாக பல தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த ஆண்டு இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
‘ஆப்பிரிக்க சிறுத்தையை அறிமுகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வனத்துறையின் திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்தியிருந்தால்,
இதுபோன்ற புலிகள் உயிரிழப்புகள் அதிகரிப்பதைத் தடுத்திருக்க முடியும்’ என்று எர்த் பிரிகேட் அறக்கட்டளையின் இயக்குநர் சரிதா சுப்ரமணியம் கூறியுள்ளார்.
புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவின் போக்கு கவலையளிப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் ஊட்டியில் ஏழு புலிகளின் இறப்புக்கான காரணங்களை அறிய, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையக்குழுவினர் ஊட்டியில் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஏப்பம் விடுபவரா நீங்கள்… தீர்வு என்ன?