சோகத்தில் முடிந்த நாடக ஒத்திகை!

Published On:

| By Monisha

பள்ளி விழாவில் பகத் சிங் கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்யோத்சவா தினம்

ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினத்தை (கர்நாடகா உருவான நாள்) உலகம் முழுவதும் உள்ள கன்னட மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காகக் கர்நாடகாவில் நவம்பர் 1 ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படும்.

கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் இத்தினம் கொண்டாடப்படும்.

இந்த கொண்டாட்டத்தின் போது பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிகளில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவன் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா டவுன் கவுளகோட் பேரங்கானை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் – பாக்கியலட்சுமி. இவர்களது மகன் சஞ்சய் கவுதா (12) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நாளை பள்ளியில் நடக்கும் கன்னட ராஜ்யோத்சவா விழாவில் சஞ்சய், பகத் சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தார். இதற்காக நேற்று (அக்டோபர் 30) தனது வீட்டில் யாருமில்லாத போது பகத் சிங்கை தூக்கிலிடும் காட்சியின் ஒத்திகையில் ஈடுபட்டார்.

கயிற்றின் ஒரு முனையை மின்விசிறியில் கட்டிவிட்டு மற்றோரு முனையைத் தனது கழுத்தில் கட்டிக் கொண்டார்.

எதிர்பாராத விதமாக சஞ்சய் கழுத்தைக் கயிறு இறுக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்றோருக்கு அதிர்ச்சி

இரவு 8 மணியளவில் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பிய போது சஞ்சய் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்தனர்.

சிறுவனின் எதிர்பாராத மரணம் கர்நாடக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவன் இறப்பு குறித்து சித்ரதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் தான் நடிக்கச் சொன்னேன்

சஞ்சய் தந்தை நாகராஜ் கூறுகையில், “என் மகன் படிப்பில் சுறுசுறுப்பாக இருப்பவன். அவன் பகத் சிங் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் தான் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டேன்.

நானும் என் மனைவியும் தினமும் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள டீ கடைக்குச் செல்வோம். என் மகனும் என்னுடன் வருவான். ஆனால் நேற்று அவன் எங்களுடன் வரவில்லை.

நாங்கள் 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தான்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மோனிஷா

மோர்பி பாலம் விபத்து: மல்லிகார்ஜுன கார்கே முக்கிய கோரிக்கை!

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் ஏன் தெரியுமா? – அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share