உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே தலைமறைவான ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபாவை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (ஜூலை 2) ஆன்மீகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா பங்கேற்று உரையாற்றினார்.
இவரது பேச்சைக் கேட்பதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே செல்ல வழியின்றி மக்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதனால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்தனர்.
முதலில், இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும், பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து உயர்மட்டக்குழு விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வரை தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது வரை ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆன்மீக கூட்டத்தை நடத்திய போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் தீக்கிரையான அரசு ஏ.சி பேருந்து: காரணம் என்ன… அரசு விளக்கம்!
வேலைவாய்ப்பு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!