சூடானில் இருந்து 9 தமிழர்கள் உட்பட 1,100 இந்தியர்கள் மீட்பு!

இந்தியா

ஆபரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து இதுவரை 9 தமிழர்கள் உட்பட 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சூடானில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைக்கும் (ஆர்எஸ்எஃப்) இடையே நடந்த பயங்கர சண்டையில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரைத் தொடர்ந்து சூடானில் சிக்கித் தவிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 23ஆம் தேதி அறிவித்தார்.

இதற்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் சூடானின் அண்டை நாடான சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவிலும், கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா போர்ட் சூடானிலும் நிலைநிறுத்தப்பட்டது.

இதற்கிடையே சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவக் குழுவுக்கும் இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

இதனையடுத்து சூடானிலிருந்து கடந்த 25ஆம் தேதி முதல் கப்பலிலும், விமானத்திலும் இந்தியர்கள் பாதுகாப்பாக சவுதி அரேபியா நகரமான ஜெட்டாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி முதற்கட்டமாக 278 இந்தியர்கள் போர்ட் சூடானில் இருந்து ஐஎன்எஸ் சுமேதா மூலம் ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதன்பின்னர் தொடர்ச்சியாக இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேற்று ஆறாவது கட்டமாக 136 இந்தியர்கள் ஜெட்டாவை வந்தடைந்தனர். இதன் மூலம் சூடானில் இருந்து வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தம் 1100 ஆக உயர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து 9 தமிழர்கள் உட்பட 360 இந்தியர்கள் விமானம் மூலம் நேற்று இரவு டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர்.

இதுகுறித்து, “இந்தியா தனது உறவுகளை மீண்டும் வரவேற்கிறது. #OperationKaveri திட்டத்தின் முதல் விமானம் 360 இந்திய பிரஜைகளை தாய்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது” என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி வந்த 9 தமிழர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களில் 5 பேர் விமானம் மூலம் சென்னைக்கும், மீதமுள்ள 4 பேர் டெல்லியில் இருந்து நேரடியாக மதுரைக்கும் சென்றடைந்தனர்.

அவசர தொடர்புக்கு…

இதற்கிடையே புதுடெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் வருவாய்த்துறை ஆணையரகத்திலும் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்னன.

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 011-24193100, 9289516711 ஆகிய எண்களிலும், tnhouse@nic.in என்ற மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 9600023645 என்ற எண்ணிலும், nrtchennai@gmail.com என்ற மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜி ஸ்கொயர் நிறுவனம்: 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

குட்டி யானைகளின் க்யூட் சண்டை: இணையத்தில் வைரல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *