இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் வைரஸின் திரிபு வகையான எக்ஸ்பிபி 1.16 வகை வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..
கொரோனா பரவல் அதிகரித்தாலும் தீவிரமடையவில்லை என்றும் கூறியுள்ளது. இருந்தாலும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் விரும்பினால் முகக்கவசம் அணியலாம் என்றும் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் முக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ஆம் தேதியில் இருந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வீட்டில் இருந்து பணியாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம்10,753 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல்14) 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு 10,753ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,720ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 493 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோனிஷா
அதிரடியாய் குறைந்த தங்கம் விலை!
ஜப்பான் பிரதமர் கூட்டத்தில் குண்டுவீச்சு!