இந்திய ரயில்வே 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வே தொடங்கப்பட்டு 72 ஆண்டுகளுக்கு பிறகே முதல் முதலில் மின்சார ரயில் இயக்கப்பட்டது. முதலில் ரயில்கள் நிலக்கரி எஞ்சின்களில் இயங்கியது. பின்னர், டீசல் இன்ஜீன்கள் கொண்டு இயக்கப்பட்டன.
1925-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி அந்த வியத்தகு மாற்றம் நிகழ்ந்தது. இந்த தினத்தில்தான் முதன் முதலில் எலக்ட்ரிக் ரயில் ஓட தொடங்கியது. மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் இருந்து குர்லாவுக்கு முதல் எலக்ட்ரிக் ரயில் இயக்கப்பட்டது.
முதன் முதலில் 1500 விடிசி பவரில் அந்த ரயில் இயக்கப்பட்டது. இப்போது 25 கேடிசி பவரில் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தியன் ரயில்வே மின்சார ரயிலை இயக்கி 100 ஆண்டுகளை எட்டியுள்ளது.
இப்போது, இந்திய ரயில்வே முற்றிலும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மத்திய ரயில்வே முற்றிலும் மின்மயமாக்கப்பட்டு விட்டது.
தற்போது, இந்தியாவில் 5 சதவிகித அகல ரயில்பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளை விரைவில் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியிடாத ரயில்வேயாக இந்திய ரயில்வே மாறிவிடும். அப்படி, மாறும் பட்சத்தில் முற்றிலும் கார்பன் வெளியிடாத உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்காக இந்தியன் ரயில்வே உருவாகும்.
இந்தியாவில் மின்சார ரயில் இயக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.