100 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி 100 நாட்களில் தீர்ந்துவிடாது என்று ரோஸ்கர் மேளா வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றினார்.
10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்டோபர் 22) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் புதிதாக பதவியேற்ற 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எப். வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 250 பேருக்கு மத்திய அரசு பணிகளுக்காக நியமன ஆணை வழங்கப்பட்டது.
ரோஸ்கர் மேளா திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியா இன்று உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், 10 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். உலகின் பல பெரிய பொருளாதாரங்கள் பணவீக்கத்தால் போராடி வருவது உண்மைதான்.
கொரோனா தொற்றுக்குப் பிறகு வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் பக்க விளைவுகள் 100 நாட்களில் போய்விட முடியாது.
ஆனால் இந்த நெருக்கடியை உலகம் முழுவதும் எதிர்கொண்ட போதிலும், இந்தியா இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் நம் நாட்டைக் காப்பாற்ற புதிய முயற்சிகளையும் சில அபாயங்களையும் எடுத்து வருகிறோம் என்றார்.
பிரதமர் தொடங்கி வைத்த வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதிதாக வேலைக்கு எடுக்கப்படுகிறவர்கள் மத்திய அரசின் 38 அமைச்சகங்களிலும், துறைகளிலும் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என பல்வேறு மட்டங்களில் பணிபுரிவார்கள். மத்திய ஆயுதப்படை போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், ஸ்டெனோ, வருமான வரி ஆய்வாளர்கள், என பல்வேறு பணிகளுக்கு இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன.
யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே பணியாளர் வாரியம் என பணி நியமன ஆள் தேர்வு செய்யும் பல்வேறு அமைப்புகள் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்படுகின்றன.
கலை.ரா
போக்குவரத்து விதி: மீறினால் அபராதம் இல்லை!
சிட்ரங் புயல்: எந்தெந்த பகுதிகளுக்கு ஆபத்து?