இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தம் 20 நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
உலகில் இன்று வரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் சீனாதான் முதலிடத்தில் உள்ளது. தற்போது, இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், விரைவில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் 11,21,821 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 71,626 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை நடந்துள்ளது. சேதக், டி.வி.எஸ் , ஓலா, ஏதர், பி- காஸ், பியூர், விடா, பவுன்ஸ் , பஜாஜ் போன்ற நிறுவனங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஓலா, டி.வி.எஸ். பஜாஜ் போன்றவை முன்னணியில் உள்ளன. ஆன் ரோட்டுக்கு வரும் போது, பெட்ரோல் பைக்குகளை விட எலக்ட்ரிக் பைக்குகளின் விலை அதிகமாக இருந்தாலும், பெட்ரோல் செலவை கணக்கில் கொண்டு மக்கள் எலக்ட்ரிக் பைக்குகளின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். சிங்கிள் சார்ஜுக்கு 100 கி.மீ வரை இந்த பைக்குகள் மைலேஜ் கொடுக்கின்றன.
100 கி.மீக்கு 4 யூனிட் மின்சாரம்தான் சார்ஜ் செய்ய தேவைப்படுகிறது. ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் என்று விலை வைத்துக் கொண்டாலும் 100 கி.மீக்கு 20 ரூபாய்தான் செலவாகிறது. அதே வேளையில் , பெட்ரோல் பைக்குகளில் 100 கி.மீ செல்ல வேண்டுமென்றால் 200 ரூபாய் தேவைப்படும். இதனால், மக்கள் விரும்பும் இரு சக்கர வாகனங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மாறி வருகின்றன.
அதோடு, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கினால் மத்திய அரசு ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் இன்னும் பல நிறுவனங்கள் களம் இறங்க வாய்ப்பு உருவாகியுள்ளது.