“ஆண்டுதோறும் 100 ஆணவக்கொலைகள்” – தலைமை நீதிபதி வேதனை

Published On:

| By Kalai

ஒவ்வொரு ஆண்டும் காதலுக்காக 100 பேர் ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர் என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான அசோக் தேசாய் நினைவு தினத்தை முன்னிட்டு மும்பையில் சனிக்கிழமையன்று பம்பாய் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த சட்டம் மற்றும் ஒழுக்கம் குறித்த அசோக் தேசாய் நினைவு விரிவுரையில் தலைமை நீதிபதி பேசினார்.

அதில், 1991 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி பெற்றோரால் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த செய்தி அறிக்கையை குறிப்பிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “கிராம மக்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் நியாயமானதாகவும் இருந்தன. அவர்கள் வாழ்ந்த அந்தச் சமூகத்தின் நடத்தை விதிகளை கடைபிடித்தார்கள்.

ஆனால், இது பகுத்தறிவாளர்களால் முன்வைக்கப்படும் நடத்தை நெறிமுறையா?இது பகுத்தறிவாளர்களால் முன்வைக்கப்பட்ட நடத்தை நெறிமுறை அல்ல? ஒவ்வொரு ஆண்டும் பலர் காதலிப்பதற்காகவோ அல்லது தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்ததற்காகவோ அல்லது தங்கள் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாகவோ கொல்லப்படுகிறார்கள்.

நடத்தை அல்லது ஒழுக்க நெறியை யார் தீர்மானிப்பது? பலவீனமானவர்களை வெல்லும் ஆதிக்கக் குழுக்கள். தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த வாழ்விற்காக ஆதிக்க கலாச்சாரத்திற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை.

இளைஞர்கள் காதலித்தாலோ!  தங்கள் சாதிக்கு வெளியே வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ!! அல்லது குடும்ப விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டாலோ! கௌரவ கொலைகள் என்ற பெயரில் ஆண்டுக்கு 100 பேர் கொல்லப்படுகின்றனர்” என்றார்.

மேலும், தலைமை நீதிபதி தனது உரையின் போது, ​​இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டி காட்டினார். இந்திய அரசியலமைப்பு தனிநபர் உரிமைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும், சமூகம், ஒழுக்கம் என கூறி மறுக்கும் விஷயங்களிலிருந்தும் கருத்துகளில் இருந்தும் இந்திய அரசியலமைப்பு பாதுகாத்து வருவதாக கூறினார்.

இந்திய அரசியலமைப்பு என்பது மக்களுக்காக வடிவமைக்கப்பட்டது அல்ல, ஆனால் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாக உள்ளது எனவும் இந்திய அரசியலைப்பு சட்டமே நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை வழிநடத்துகிறது என்றும் பேசினார்.

கலை.ரா

சுங்கத்துறைக்கு புதிய கட்டடம்: நிதியமைச்சரின் ஆசை!

“விவசாயத்தையே நம்பி இருக்க முடியாது” – ஆ.ராசா பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share