உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்று 100 நாள் நிறைவடைந்த நிலையில் 14 ஆயிரம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த யு.யு.லலித் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக இருந்த தனஞ்செய் யஷ்வந்த் (டி.ஒய்.) சந்திரசூட் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
டி.ஒய்.சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்றவர்.
அயோத்தி நில வழக்கு, ஆதார் எண், சபரிமலை விவகாரம், தன்பாலின உறவாளர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர்.
இவர் பதவியேற்றால் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று பேசப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட டி.ஒய் சந்திர சூட்டின் பணிக்காலம் 2 ஆண்டுகளுக்கும் மேல் உள்ளது.
இந்த நிலையில் அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்று பிப்ரவரி 16 ஆம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இதில், கடந்த 100 நாட்களில் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில் செயல்படும் உச்சநீதிமன்றத்தால் 14,209 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது.
இவை தவிர உச்சநீதிமன்றத்தின் மொத்த அலுவல் நடவடிக்கைகளும் டிஜிட்டல் வாயிலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவாளர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 40 லிருந்து 80 ஆக உயர்ந்துள்ளது.
நீதிமன்ற அமர்வுகள் கையாளும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவை தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது.
இதே காலகட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் 13,764 வழக்குகள் புதிதாக தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது!
அன்பு ஜோதி ஆசிரமம்: மேலும் 5 பேர் காணவில்லை – தொடரும் மர்மம்!