10% இட ஒதுக்கீடு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!

இந்தியா

உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு   பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.

ஆனால் இந்த இட ஒதுக்கீட்டு முறை, அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில்  இல்லை.

இதனால் பிற சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மேலும், இட ஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை இந்த சட்ட திருத்தம் மீறுகிறது என  நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் 10% இட ஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து,  தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது.

தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், திமுக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இன்றைய இறுதி விசாரணையின் போது,  “தமிழ்நாடு  பட்டியலில் உள்ள ஓ.பி.சி பிரிவினர் முழுமையாக  மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படாததால் மத்திய அரசு பணிகளில் அனைத்து ஓ.பி.சி பிரிவினருக்கும் பணி கிடைப்பதில்லை. இதனால்  சமத்துவமின்மை தொடர்வதாக”  திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  வாதிடப்பட்டது.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் எழுத்து மூலமான எதிர்வாதங்களைத் தாக்கல் செய்தார்.

அப்போது, பொருளாதார இடஒதுக்கீடு கூடாது என்பதை முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பது அல்ல.

பின் தங்கிய சமூகத்தை உயர்த்துவதற்கான திட்டம். மத்திய அரசு வழக்கறிஞர் முன்வைத்த 31.2% உயர்வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளனர் என்ற தரவு தவறானது” என்று தெரிவித்தார்.

அந்த கணக்கு என்பது NSO  வேலைவாய்ப்புக்காக  1.24 லட்சம் வீடுகளில் எடுக்கப்பட்ட கணக்கு. சமூக அடிப்படையிலான கணக்கு அல்ல.

எனவே, சினோ ஆணையம் அறிக்கை குறிப்பிட்டுள்ள அந்த தரவுகளை 10% இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக எடுக்கக் கூடாது.

சமூக  இடஒதுக்கீட்டை பாதிக்கும் 10% பொருளாதார  இடஒதுக்கீடு சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்”  என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

பின்னர் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “10% இட ஒதுக்கீடு வழங்கியதால் இடஒதுக்கீடு பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த 2,14,000 இடங்கள் உயர்கல்வி நிலையங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கான உள்  கட்டமைப்புக்காக ரூ. 4315 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது” என்று  தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “மத்திய பல்கலைகழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கட்டணம் எவ்வளவு? அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை எவ்வளவு?  என்பதை தாக்கல் செய்ய மத்திய அரசை அறிவுறுத்தி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் கடந்த செப் 13 ஆம் தேதி முதல் 7 நாட்கள் இறுதி  விசாரணை நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கபட்டுள்ளது.

கலை.ரா

3 பெண் அதிகாரிகள் : வண்ணாரப்பேட்டை சிறுமிக்கு கிடைத்த நீதி!

ஆம்னி பேருந்துகள் சேவை ஒன்றும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *