நெருங்கும் தேர்தல்: குஜராத்தில் சமையல், வாகன எரிவாயு வரிக் குறைப்பு!
குஜராத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாகனங்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான வரி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் ஜனவரியிலும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரியிலும் முடிவுக்கு வருகின்றன.
இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்துக்கான தேர்தல் தேதியை மட்டும் அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்துக்கு தேர்தலை அறிவிக்கவில்லை.
பாஜகவுக்கு உதவுவதற்காகவே தேர்தல் ஆணையம் தேதியை தாமதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தநிலையில், குஜராத்தில் வாகனங்களில் பயன்படும் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் எரிவாயு மீதான வரி vat எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இன்று சராசரி சிஎன்ஜி எரிவாயு விலை ரூ.83.9, காந்திநகரில் ரூ.82.16 மற்றும் வதோத்ராவில் ரூ.81.15 ஆக விற்பனையாகிறது. சிஎன்ஜி மீதான வாட் வரியைக் குறைத்த பிறகு, நுகர்வோர் ஒரு கிலோவுக்கு ரூ. 6 முதல் 7 வரை பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது பாஜக தலைமையிலான மாநில அரசு.
புதிய திட்டங்களை தொடங்குவதற்கும், சலுகைகளை அறிவிப்பதற்கு வசதியாகவும் குஜராத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்தநிலையில், தற்போது குஜராத்தில் சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிவாயு மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா
நிதியமைச்சர் சொன்னது உண்மைதான் : ப.சிதம்பரம்
பிளிப்கார்ட் பிக் தீபாவளி: ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!