10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அரசு வேலைக்காக பல லட்சம் மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். எப்படியாவது அரசு பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக முழு முயற்சி எடுத்து படித்து வருகின்றனர்.
இதில் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின் போது பிரதமர் மோடி ஒரு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஆட்சி அமைத்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வில்லை என எதிர்க்கட்சிகள் பாஜக மற்றும் மோடியை விமர்சித்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ரோஸ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலம் நாட்டின் பல இடங்களில் 75,000 இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலை வழங்கப்பட்டது.
ஒரு கோடி பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறிவிட்டு வெறும் 75,000 பேருக்கு மோடி வேலை வழங்கியிருப்பது ஏமாற்று வேலை என இதனையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
எனினும் 100 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை வெறும் 100 நாளில் செய்துவிட முடியாது என மோடியும் பதிலுக்குக் கூறினார். இதேபோல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குஜராத்தில் ரோஸ்கர் மேளா என்ற பெயரில் மாநில அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,
“இதேபோன்ற வேலை வாய்ப்புகள் அளிக்கும் ரோஸ்கர் மேளா நிகழ்ச்சிகள் தேசிய மற்றும் மாநில அளவில் நடத்தப்படும். 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது.
வேலைவாய்ப்பு வழங்கும் இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இணைந்துள்ளன. இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும்” என்று கூறியுள்ளார்.
-ராஜ்