இளைஞர்களுக்கு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு!

இந்தியா

வேலையில்லா திண்டாட்டத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியினரை விமர்சித்து வரும் நிலையில், வரும் சனிக்கிழமை அன்று மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கிராமப் பகுதியில் 8.0 சதவிகிதமாகவும், நகரப் பகுதியில் 7.5 சதவிகிதமாகவும் உள்ளது.

சராசரியாக இந்தியா முழுவதும் தற்போதைய நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.9 சதவிகிதமாக உள்ளது. இது 2014ல் ஒட்டுமொத்தமாக 5.44சதவிகிதமாக இருந்தது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி கூறிய 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி என்னாச்சு என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வலியுறுத்தியும் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

அவருடன் பாத யாத்திரையில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், “நாங்கள் எங்களின் வேலைக்காக யாத்திரை செல்கிறோம்” என்று குறிப்பிட்ட டீ சர்ட்டை அணிந்து பங்கேற்கின்றனர்.

இதனிடையே பிரதமர் மோடி மத்திய அரசு துறைகளில் அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் தான் நாளை மறுநாள் (அக்டோபர் 22) 10 லட்சம் வேலைவாய்ப்புக்கான திருவிழாவை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

காலை 11 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியில், மத்திய அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்ட 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி உரையாற்றவுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்.

பிரதமரின் வழிகாட்டுதலின்படி, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் போர்க்கால அடிப்படையில் காலியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளன.
புதிய பணியாளர்கள் குரூப் ஏ மற்றும் பி (கெசட்டட்), குரூப் பி (நான் – கெசட்டட்) மற்றும் குரூப் சி என பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், கீழ்நிலை பிரிவு எழுத்தர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களிலும் புதிய நியமனம் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஸ்கர் மேளா எனப்படும் இந்த வேலைவாய்ப்பு திருவிழா யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான தீபாவளி பரிசாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரியா

தீபாவளி பயணம்: மெட்ரோ முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 1: கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு!

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0