ஹரியானாவிலுள்ள மானேசர் மாருதி சுசூகி தொழிற்சாலையில் 1 கோடி ப்ரெஸ்ஸா ரக கார்களை உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி முதன்முறையாக ஜப்பான் நாட்டுக்கு கார்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்த நிறுவனம் ஆகும். பாலினோ ரக கார்களை ஜப்பானுக்கு இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் கிர்கான் அருகேயுள்ள மானேசர் பகுதியில் புதிய தொழிற்சாலையை மாருதி சுசூகி நிறுவனம் தொடங்கியது. இங்கு பிரெஸ்ஸா, எர்டிகா, டிசையர், வேகன் ஆர் போன்ற பல ரக கார்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்த கார்கள் உள்நாட்டில் விற்பனையில் சக்கை போடு போட்டது மட்டுமல்லாமல் ஆசியா, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாலினோ ரக கார்களும் மானேசர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டவைதான். மானேசர் மற்றும் குஜராத் தொழிற்சாலையில் மட்டும் ஆண்டுக்கு 23.50 லட்சம் யூனிட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்த தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை, 3.11 கோடி கார்களை உற்பத்தி செய்துள்ளன.
அதில், முக்கியமாக ப்ரெஸ்ஸா ரக கார்கள் கடந்த 18 ஆண்டுகளில் மானேசர் தொழிற்சாலையில் இருந்து 1 கோடி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது. ஒரே தொழிற்சாலையில் இருந்து ஒரே ரக கார் ஒரு கோடி உற்பத்தி செய்யப்படுவது இதுவே முதன்முறை.
இது குறித்து மாருதி சுசூகி தலைமை செயல் அதிகாரி ஹிஷாசி தெக்குச்சி கூறுகையில், ”நாங்கள் இந்த சாதனையை எட்டுவதற்கு வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைதான் காரணம். எங்கள் ஊழியர்கள், டீலர்கள், இந்திய அரசுக்கும் அவர்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. எங்களது சப்ளையர்களுக்கும் அவர்கள் அளித்த நேர்மையான உழைப்புக்கும் எங்களது நன்றி. உங்களது ஒத்துழைப்பால்தான் சர்வதேச நாடுகளுடன் எங்களால் போட்டி போட முடிகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஓவியாவின் அந்த வீடியோவை வெளியிட்டது யார் தெரியுமா? பிடிபடும் சுள்ளான்!
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)