ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில், இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி மீது வருமான வரித்துறை அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கிய நிலையில் இன்று 1,823 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (மார்ச் 29) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டும் இப்படி நியாயமற்ற முறையில் செயல்பட வருமான வரித்துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்?
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸைத் துன்புறுத்த ஐடி துறையை ஆயுதமாகப் பயன்படுத்த அனுமதிப்பது ஏன்?
ஐடி, இடி, சிபிஐ போன்ற நிறுவனங்களை ஜனநாயகத்தை குலைப்பதற்கும் அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவதற்கும் அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஐடி 1823 கோடி ரூபாய் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை எடுத்துள்ளனர், இது மக்களின் நன்கொடை மூலம் நாங்கள் சேகரித்த நிதியாகும்.
ஆனால் பாஜகவுக்கு ஐடி எந்த நோட்டீஸும் கொடுக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் பொதுத் தகவல்கள் தெளிவாகக் காட்டினாலும், 2017-18 ஆம் ஆண்டில் 1297 பேர் தங்கள் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடாமல் ரூ.42 கோடியை பாஜகவுக்கு டெபாசிட் செய்துள்ளனர்.
காங்கிரஸுக்கு ரூ.14 லட்சம் டெபாசிட்களுக்கு ரூ.135 கோடி அபராதம் விதிக்கப்பட்டு அதன் கணக்கு முடக்கப்பட்டது.
ஆனால் கடந்த 7 ஆண்டுகளில், பாஜகவுக்கு வந்த நன்கொடைக்கு அபராதம் ரூ.4,600 கோடி போடப்பட்டிருக்க வேண்டும்.
எங்களின் நேரடிக் கேள்வி பாஜகவுக்கு ஏன் இந்த அபராத விலக்கு?
பாஜகவின் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டின் நிறுவனங்களை விடுவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் தலைமை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
RCB vs KKR: ‘பயப்படுறியா குமாரு’… கம்பீர்-கோலிக்கு பறக்கும் மீம்ஸ்கள்!
’சிறுபான்மையினருக்கான கட்சி திமுக மட்டும் தான்’ : கதிர் ஆனந்த் பிரச்சாரம்!