இந்திய சாலைகளில் ஒரு காலத்தில் ஆக்கிரமித்த கார்களில் மாருதி 800 முக்கியமானது. மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்பு இதுவாகும். ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம் இந்தியாவில் மாருதி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த காரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த காரை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் அப்போது, சுசூகி நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒஸாமு சுசூகி முதன்மையானவர். ஜப்பான் நாட்டின் ஹமாட்சு நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுசூகி நிறுவனத்தின் கார்களை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஆச்சரியப்படுத்தியவர் இவர்.
சரி .. இந்தியாவில் மாருதி 800 கார் கோலோச்சியது எப்படி?
கடந்த 1980-களில் அம்பாசிடர் கார்கள்தான் இந்திய சாலைகளை ஆக்கிரமித்து கொண்டிருந்தன. இந்த சமயத்தில் 1982-ஆம் ஆண்டு இந்திய அரசு மாருதி உத்யோக் நிறுவனத்தை தொடங்கியது.
இந்திய சாலைகள் அப்போது மிகுந்த கரடு முரடாக இருப்பவை. இதனால், அம்பாசிடர் போன்ற பெரிய, பலமான கார்கள்தான் சரியானது என்கிற சிந்தனை இருந்தது.
இதன் காரணமாக லைட் வெயிட் கார்களுக்கு வேலை இல்லை என்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
இந்த சமயத்தில் ஒஸாமு சுசூகி போல்டாக முடிவெடுத்தார். மாருதி உத்யோக் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட முடிவு செய்தார். முதலீடும் செய்தார். தொடர்ந்து , அறிமுகமான மாருதி 800 கார் இந்திய சாலைகளை கோலோச்சியது என்பது வரலாறு.
அந்த காலக்கட்டத்தில் மாருதி 800 வைத்திருந்தால் அது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. சச்சின் முதற் கொண்டு பல பிரபலங்கள் வாங்கிய முதல் கார் மாருதி 800 ஆகத்தான் இருக்கும். தற்போது, இந்திய கார்சந்தையில் மாருதி சுசூகி 40 சதவிகிதத்தை வைத்துள்ளது என்பதும் குறிப்பிட்டது. இதற்கெல்லாம் விதை போட்டது ஒஸாமு சுசூகி என்றால் மிகையல்ல.
1930 ஆம் ஆண்டு ஜப்பானின் ஜிபு என்ற இடத்தில் ஒசாமு பிறந்ததார். இயற்பெயர் ஓஸாமு மட்சூடா. பின்னர், சுசூகி குடும்பத்தின் பெண் எடுத்ததால், சுசூகி என்பது இணைந்து கொண்டது. முதலில் வங்கி ஒன்றில் பணி புரிந்தவர், 1958 ஆம் ஆண்டு சுசூகி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து, அங்கு பல்வேறு பதவிகளில் இருந்து 1979 ஆம் ஆண்டு சுசூகி நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார்.
அதே ஆண்டில் ஜப்பானில் ஆல்ட்டோ ரக காரை அறிமுகப்படுத்தினார். இந்த காரை வேறுவிதமாக மாற்றி இந்தியாவில் மாருதி 800 ஆக அறிமுகம் செய்தார்.
கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் சுசூகி நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒசாமு சுசூகி 2015 ஆம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது, சுசூகி நிறுவனத்தின் தலைவராக அவரின் மகன் தோஷிஹிரோ உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு , ஒசாமு சுசூகியை புற்று நோய் தாக்கியது. புற்று நோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனிக்காமல் டிசம்பர் 25 ஆம் தேதி இறந்து போனார். அவருக்கு வயது 94.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்