நடிகை காதம்பரி ஜெத்வானி பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடித்த ‘செந்தட்டி காளை செவத்த காளை’ என்ற படம் இன்னும் வெளியாகவில்லை. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், மும்பையில் வசிக்கிறார்.
இவர் சமீபத்தில், “என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தொழிலதிபர் ஜிண்டால் என்பவர் எங்களுக்கு எதிராக ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் குக்கல வித்யாசாகர் மூலம் எங்கள் மீது மோசடி வழக்கு ஒன்றை ஆந்திராவில் பதிய கேட்டுக் கொண்டார்.
அதன் பேரில், போலி வழக்குப்பதிவு செய்த விஜயவாடா போலீசார், கடந்த பிப்ரவரி மாதம் மும்பைக்கு வந்து, என்னையும் என் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று, 3 நாள்கள் சித்ரவதை செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரியே என்னை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் துன்புறுத்தினார்.
48 நாள்கள் எங்களை சிறையில் அடைத்திருந்தனர். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போது முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார். தொடர்ந்து, ஆந்திர அரசு விசாரணை அமைப்பு ஒன்றை அமைத்து விசாரித்தது.
விசாரணையில் , நடிகையை பொய்யான புகாரின் கீழ் கைது செய்து துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான முன்னாள் உளவுத்துறை தலைவர் பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு, விஜயவாடா முன்னாள் போலீஸ் கமிஷனர் கிராந்தி ராணா டாடா, விஜயவாடா முன்னாள் துணை கமிஷனர் விஷால் குன்னி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே கையொப்பமிட்டு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளும் பதவியில் இல்லாமல் தினமும் இருமுறை டிஜிபி அலுவலகத்தில் வந்து வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டெல்லியில் கெஜ்ரிவால் இடத்தில் யார்?
“தெறிக்க விட்டான் வந்தல்லே” – ‘வேட்டையன்’ ஆடியோ லாஞ்ச் எப்போது?