ட்விட்டரை வாங்குவதற்கான 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலோன் மஸ்க் நேற்று (ஜூலை 8) அறிவித்தார்.
உலகின் மிகப்பெரும் பணக்காரராகத் திகழ்பவர் டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியான எலோன் மஸ்க். இவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கத் தயார் என தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலோன் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதுமுதல் அவர் எப்போது ட்விட்டரை வாங்குவார், அதில் என்னென்ன மாற்றங்களைச் செய்வார் என உலகளவில் ட்விட்டர்வாசிகள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இதற்கிடையே கடந்த மே மாதம், ட்விட்டருடனான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என எலோன் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். ட்விட்டர் நிறுவனம் கூறுவதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் இருப்பதாலே ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்ந நிலையில் நேற்று ட்விட்டரை வாங்குவதற்கான 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். போலி கணக்குகள் பற்றிய தகவல்களை அந்நிறுவனம் வழங்கத் தவறியதால் எலோன் மஸ்க் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து உலக அளவில் ட்விட்டரின் பங்குகள் 7% சரிந்தன.
முன்னதாக இரு தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி எலோன் மஸ்க் டீலிங்கை முடிக்கவில்லை என்றால் 1 பில்லியன் டாலர் பிரேக்-அப் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. தற்போது எலோன் மஸ்க் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து எலோன் மஸ்க் மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது.
ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லோ இதுகுறித்து கூறுகையில், “இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடர ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. எலோன் மஸ்க்குடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விலை மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தை நிறைவேற்ற நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இந்த சட்டப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எலோன் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “ட்விட்டர் தளத்தில் உள்ள போலி கணக்குகள் குறித்த தகவலுக்கான பல கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க அந்நிறுவனம் தவறிவிட்டது. இது நிறுவனத்தின் வணிக செயல்திறனுக்கு அடிப்படையாகும். இணைப்பு ஒப்பந்தத்தில் நுழையும் போது மஸ்க்கை நம்ப வைப்பதற்காகத் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் இரு தரப்பு ஒப்பந்தத்தின் பல விதிகளை மீறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.
– கிறிஸ்டோபர் ஜெமா