பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான வன்முறை தாக்குதலுக்கு உலகளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஈரான் பத்திரிக்கைகள் அதனை கொண்டாட்டமாக செய்தி வெளிட்டுள்ளது சர்வதேச எழுத்தாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புகழ்பெற்ற அதே வேளையில் சர்ச்சைக்குரிய இந்திய வம்சாவளி எழுத்தாளராக அறியப்படுபவர் சல்மான் ருஷ்டி(75). தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 12ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் திடீரென மேடையின் மீது ஏறி ருஷ்டியை கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக சுமார் 20க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தினார். இதில் அதிக ரத்தம் வெளியேறி, மேடையில் சரிந்த ருஷ்டியை உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
ஒருநாள் முழுவதும் சல்மான் ருஷ்டி வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் அவருக்கு இன்னும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

குற்ற உணர்ச்சி இல்லை!
இதனையடுத்து சல்மான் ருஷ்டி மீதான இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ஹாடி மாதர் என்ற 24 வயதான இளைஞன் நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் ஈரான் வம்சாவளி என்பதும், தற்போது நியூ ஜெர்சி பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹாடி, சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தியதில் தனக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அவனை கொலை முயற்சி, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட வழக்குப்பிரிவுகளின் கீழ் ஜாமீன் இன்றி சௌதாகுவா கவுண்டி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சல்மான் ருஷ்டி மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரபல எழுத்தாளர்கள் ஜே.கே.ரெளலிங், தஸ்லிமா நஸ்ரின், காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
பாராட்டும் ஈரான் பத்திரிக்கைகள்!
அதே வேளையில், ருஷ்டி மீதான இந்த தாக்குதலை வரவேற்றும், இதனை நிகழ்த்திய குற்றவாளி ஹாடி மாதரை பாராட்டியும் ஈரானிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

- ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளாக அறியப்படும் கயஹான் பத்திரிக்கையில், “நியூயார்க்கில் இஸ்லாமிய நம்பிக்கை துரோகி மற்றும் அரக்கன் சல்மான் ருஷ்டியை துணிச்சலுடன் கழுத்தைக் கிழித்த இளைஞனின் கையை முத்தமிட வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- எம்ரூஸ் பத்திரிக்கையில் “சல்மான் ருஷ்டியின் கழுத்தில் கத்தி” என்று கொடூர தாக்குதலை வர்ணித்துள்ளது.
- உயிருக்கு போராடி வரும் ருஷ்டியை சாத்தான் என்றும், அவர் நரகத்திற்கு செல்வார் என்றும் குறிப்பிடும் விதமாக கொராசன் என்ற நாளிதழ் “நரகத்திற்குச் செல்லும் வழியில் சாத்தான்” என்று தலைப்பு செய்தியாக குறிப்பிட்டுள்ளது.

கொலை செய்ய அழைப்பு விடுத்த ஈரான் தலைவர்!
கடந்த 1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ புத்தகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகள் இடம்பெற்றதால் கடும் சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து அப்போதைய ஈரானிய புரட்சிகர தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி, ருஷ்டியை கொல்ல அழைப்பு விடுத்தார். மேலும் அவரை கொலை செய்தால் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ருஷ்டி மீதான தாக்குதலை நடத்திய குற்றவாளி ஒரு ஈரான் வம்சாவளி என்பதால் ஈரான் பத்திரிக்கைகள் அதனை பாராட்டி வருகின்றனர். இது சர்வதேச எழுத்தாளர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
–கிறிஸ்டோபர் ஜெமா
காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் சரோஜ் நாராயண சுவாமி காலமானார்!