சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு வழிப்பாட்டு தளங்களில் தேசியக் கொடி ஏற்றுவது நம் நாட்டில் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஆலயம் ஒன்றில் ஏற்றிய தேசியக் கொடியை இறக்கும் போது, மின்சாரம் தாக்கி பாதிரியார் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் முல்லைரியா பகுதியிலுள்ள இன்ஃபேன்ட் ஜீசஸ் ஆலயத்தில் பாதிரியாராக மேத்யூ பணியாற்றினார். கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு காலையில் இந்த ஆலயத்தில் தேசிய கொடி உற்சாகமாக ஏற்றி வைக்கப்பட்டது.
காலையில் பாதிரியார் மேத்யூ தேசியக் கொடியை ஏற்றி, அனைவரையும் உறுதிமொழி எடுக்கவும் வைத்தார். இதையடுத்து மாலை 6 மணியளவில் தேசிய கொடியை இறக்கும் பணியில் பாதிரியார் மேத்யூ ஈடுபட்டார். அப்போது, தேசியக் கொடி கயிற்றில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதையடுத்து பாதிரியார் மேத்யூ அவரின் உதவியாளர் செர்பின் ஜோசப் சேர்ந்து கொடிக்கம்பத்தை ஆட்டி ஆட்டி கொடியை இறக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அருகே சென்று கொண்டிருந்த மின்வயரில் கொடிக்கம்பம் பட்டுள்ளது. இதில், கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து இருவரையும் தூக்கி வீசியுள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பாதிரியார் மேத்யூ இறந்து போனார். செர்பின் ஜோசப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஆலயத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இளம் வயதிலேயே துறவு வாழ்க்கை மேற்கொண்டதோடு, ஏராளமான மக்களுக்கு உதவியும் செய்து வந்துள்ளார். சமூக சேவை செய்யும் ஆர்வத்தில் எம்.எஸ்.டபிள்யூவும் படித்தார். பலியான பாதிரியார் மேத்யூவுக்கு தாயும் இரண்டு உடன்பிறந்தோரும் உள்ளனர்.
29 வயதேயான இளம் பாதிரியார் மின்சாரம் தாக்கி இறந்தது,அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– எம்.குமரேசன்
ஆவணி மாத நட்சத்திர பலன் -பூசம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
தாம்பரத்தில் அலைமோதும் கூட்டம்… ரயில் பயணிகள் அவதி!