இந்தியாவில் முதன்முறையாக தனியார் தங்கச் சுரங்கம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் அமைகிறது. இந்த சுரங்கத்திலிருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கம் வெட்டி எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. India first gold mine
இந்த பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் 1994ஆம் ஆண்டிலேயே கண்டறிந்தது. மேலும், அங்கு தங்கம் குறித்த ஆய்வுக்கு மிகப்பெரிய முதலீடு தேவையிருந்ததால், எந்த தனியார் நிறுவனமும் இதற்கு முன்வரவில்லை. கடந்த 2005ஆம் ஆண்டு சுரங்க கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், பெங்களூரைச் சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையில் ஆய்வுரிமம் பெற்றது.
அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையில், ஜியோ மைசூர் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை டெக்கான் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் வாங்கியது. மேலும், 750 ஏக்கர் நிலத்தை வாங்கி, 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆய்வு தொடங்கப்பட்டு, தற்போது 30,000 ஆழ்துளை கிணறுகளின் மூலம் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஆய்வில் இதுவரை கிடைத்த தகவல்கள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வுகளுக்கான அனுமதி தாமதமாகியதால் தங்கம் வெட்டும் பணி தள்ளிப்போனது. தற்போது, ஆந்திரப் பிரதேச அரசு பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது. அனுமதி கிடைத்தவுடன் மூன்று மாதங்களுக்குள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியை தொடங்கும் திட்டம் உள்ளது. இது இந்தியாவின் முதலாவது தனியார் தங்கச் சுரங்கமாக வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், தமிழகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்தியாவின் தங்க உற்பத்தி திறன் அதிகரிக்கப் போகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து, தங்க இறக்குமதி மீதான இந்தியாவின் சார்பு குறையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். India first gold mine