ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்று (ஜனவரி 31) கைது செய்யப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று (பிப்ரவரி 1) ஆலோசனை நடத்துகின்றனர்.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்ததாகவும்,
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
இதனையடுத்து அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதனை தொடர்ந்து புதிய முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், போக்குவரத்துறை அமைச்சருமான சம்பயி சோரன் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும், ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் பல்வேறு பழங்குடியின அமைப்புகள் இன்று பந்த் அறிவித்துள்ளன.
இந்தநிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டமானது டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது, இந்தியா முழுவதும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு?
உயிர் காக்கும் திட்டம்: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இலவச சிகிச்சை!
Comments are closed.