இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 8) தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் 2 நாட்கள் நடைபெறவுள்ள தேசிய கருத்தரங்கினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 8) தொடங்கி வைத்தார்.
கோவை பந்தயசாலையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் அகில பாரதிய ராஷ்ட்ரிய சாஷிக் மாகாஷங் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்பில் இந்த தேசிய கருத்தரங்கு நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டு தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் மற்றும் நாட்டின் பாரம்பரியத்தோடு சேர்ந்த கல்வி முறை குறித்த கருத்துகளை பற்றி உரையாட உள்ளனர்.
இந்த கருத்தரங்கினை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த அபரீவிதமான வளர்ச்சி உலக அளவில் அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் நமது அறிவு சார்ந்த வளர்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும். இதற்கு நமது தேசிய கல்விக் கொள்கை வழிவகை செய்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு நமது இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக இருந்தது.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு பிறகும், விடுதலை அடைந்த பின்பும் உலக பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தில் தான் இருந்தது. இதற்கு காரணம் என்னவென்றால், மேற்கத்திய நாடுகளின் சிந்தனைகளின் தாக்கம் நம்மில் இருந்தது தான்.
பிரிட்டிஷ்காரர்கள் நமது நாட்டை விட்டு வெளியேறிய போதும் காலனி நாடுகளின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக அவர்களின் ஆதிக்கம் கல்வியிலும் இருந்தது.
இதை மாற்றும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு நமது நாட்டின் பராம்பரியம் மிக்க கல்வி முறை அதில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் நாம் இருக்கவேண்டும் அதற்கு கல்வி மற்றும் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
நமது நாட்டில் தான் உலகத்தில் உள்ள அனைத்தும் ஒரே குடும்பம் என பார்க்கும் அறிவு மற்றும் சிந்தனை எழுந்துள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர், வாசுதேவ குடும்பகம் ஆகிய தத்துவங்கள் தான் நமது ரிஷிகள் நமக்கு வழங்கிய மிக முக்கியமான அறிவாகும்.
சில காலங்களுக்கு முன்பு மிகக் குறைந்த அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த சூழலில் தற்போது இளைஞர்களின் அறிவுத்திறன் கொண்டு ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் மிகைப்படுத்துதல், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே உள்ளன.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது.
கொரோனா காலகட்டத்தில் உலக நாடுகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரித்து அதனை உலக நாடுகளுக்கு வழங்கி அனைவரையும் காப்பாற்றினர். இதுவே நமது அறிவின் சிறப்பாகும்.
இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை. இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல. ஆங்கிலேயர்கள் வரும் முன்பு வரை இந்தியா நூற்றாண்டுகளாக பாரத் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
பாரத் என்றால் ஒளி. பாரத் என்பதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒத்த அர்த்தமுடையவை அல்ல. பாரத் என்பதை இந்தியா என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மைக் மோகனின் ’ஹரா’ : முதல்நாள் வசூல் நிலவரம் என்ன?
வெற்றி கொண்டாட்டம் முக்கியம் தான், ஆனால்… நிர்வாகிகளுக்கு கார்கே அட்வைஸ்!