மீண்டும் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டிய அண்ணாமலை

Published On:

| By indhu

தேர்தலுக்குப் பிறகு சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் இன்று (மே 27) பாஜக மாநில, மாவட்ட மையக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்றத் தேர்தல் குழு, மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் நடந்து முடிந்த இந்த 30 நாட்களில் அவர்களே எங்களது தலைவர் தான் துணை பிரதமர் என சொல்லிக்கொள்கிறார்கள்.

தமிழக எல்லையை தாண்டிவிட்டால், இந்தியா கூட்டணியை சார்ந்த தலைவர்களே தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், டெல்லியில் பாஜக 60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் பாஜக ஒரு சரித்திர வெற்றியை பெறும். தெலங்கானாவில் 10 தொகுதிகளை தாண்டி பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்பது உண்மையான நிலவரம்.

வட இந்தியாவின் பக்கம் நாம் செல்லவே வேண்டாம். தென் இந்தியாவை மட்டும் கருத்தில் கொண்டால், நிச்சயமாக பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். 2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை விட இந்த 2024 தேர்தலில் பாஜக அதிக இடங்களை வெல்லும்.

ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது. அதேபோல், பாஜக இந்த பகுதியில் இல்லை, இது காங்கிரஸ் கோட்டை, பாஜக இங்கு இதுவரை வெற்றி பெறவில்லை போன்ற பேச்சுகளும், கருத்துகளும் ஜூன் 4ஆம் தேதி காலை 11 மணியுடன் முடிந்துவிடும்.

தாமரை எப்படி அடர்ந்து, படர்ந்து இருக்குமோ அதேப்போல் ஜூன் 4ஆம் தேதி பாஜக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடர்ந்து, படர்ந்து இருக்கும். தமிழகத்தில் உள்ள திமுகவினர் எப்போதும் தேர்தல் நடைபெறும் போது ஒரு கனவுலகில் தான் இருப்பார்கள்.

தற்போதும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியானதும் அவர்களது கனவு வழக்கம்போல் கலையும். இதையாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பாஜகவினர் அனைவரும் நமது வெற்றியை கொண்டாடுவதற்கு தயாராக இருக்கவேண்டும். இந்தியாவில் மூன்றாவது முறையாக, இன்னும் வலிமையாக பாஜக ஆட்சி அமைக்கும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

மோடி என்பவர் மீது இருக்கும் நம்பிக்கை, இந்த தேர்தலுக்கு பிறகு இன்னும் அதிகரித்திருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா 1991 வாக்குப்பதிவின் போது ஒரு கருத்தை சொல்லியிருப்பார்.

அதில், ‘இந்தியாவின் சூழலை விட தமிழகத்தின் சூழல் என்பது வித்தியாசமானதாகும். இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு என்பது இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொள்வது. அதாவது இந்து-முஸ்லீம் அல்லது இந்து-கிறிஸ்டியன் அல்லது இரண்டு சாதியினர் சண்டையிட்டு கொள்ளலாம். இதுதான் இந்தியாவின் சட்டம்-ஒழுங்கு.

ஆனால், தமிழகத்தில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு என்பது நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கும், நாட்டிற்கு ஆதரவான சக்திகளுக்கும் இடையேயான போராட்டம் ஆகும். இதுதான் தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சூழல் ஆகும்.’ என ஜெயலலிதா கூறியிருப்பார்.

அதேபோல், தற்போது எதிர்க்கட்சியில் கூட்டணியில் உள்ளவர்களுக்கு எதற்காக இந்த கூட்டணியில் உள்ளோம், இந்த கூட்டணியின் கொள்கை என்ன என்பது பற்றி எதுவும் தெரியாது. மோடி என்ற ஒற்றை மனிதரை எதிர்க்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது” என பேசியுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராணுவத் தளபதிக்கு கால நீட்டிப்பு! மோடியின் அசாதாரண நடவடிக்கை ஏன்?

IPL 2024 Final: சேப்பாக்கம் மைதானத்தில் “CSK, CSK” என கோஷமிட்ட ஷாருக்கான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share