வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று (அக்டோபர் 3) ஒரே இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் மூன்று வீரர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.
தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வென்ஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி முதல் இன்னிங்ஸில்162 ரன்களை மட்டுமே சேர்ந்தது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்கத்தில் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சாய் சுதர்சன் 7 ரன்னில் வெளியேறினார். மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் அரை சதம் விளாசினார்.
தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் பொறுமையாக ஆடி வந்த கேப்டன் கில் அரைசதம் (50) அடித்து அவுட்டானார்.
எனினும் கிளாசிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் (100) சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்து அசத்தினார். அதோடு தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார்.
இதனையடுத்து துருவ் ஜுரேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி களத்தில் நின்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தியது.
இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில் துருவ் ஜூரேல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் மொத்தம் 210 பந்துகளை சந்தித்து 125 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆல்ரவுண்டரான ஜடேஜாவும் தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 448 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
களத்தில் சதமடித்த ஜடேஜா (104) மற்றும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் (9) உள்ளனர்.

இந்திய அணி அரிய சாதனை!
இந்த போட்டியில் மூன்று வீரர்கள் சதமடித்தன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அரிய சாதனை படைத்துள்ளது.
அதாவது, 1979, 1986, 2007 ஆகிய ஆண்டுகளில் ஒரு வருடத்தில் 3 முறை ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்தியா 3 சதங்கள் அடித்து அசத்தி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக 4வது முறையாக இந்திய அணி இந்த அரிய சாதனையை படைத்துள்ளது.
இந்த ஆண்டில் முதலில் இங்கிலாந்து தொடரில் லீட்ஸ் முதல் போட்டியில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதம் அடித்தனர். இதையடுத்து அதே தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதமடித்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல், ஜுரேல் மற்றும் ஜடேஜா சதம் அடித்துள்ளனர்.
அதோடு இந்த போட்டியில் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ஜடேஜா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை (78) பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஜடேஜா (80). முதலிடத்தில் ரிஷப் பண்ட் மற்றும் முன்னாள் வீரர் சேவாக் ஆகியோர் தலா 90 சிக்சர்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
