இளைஞர்களை நெகிழவைத்த இன்ஸ்பெக்டர்!

Published On:

| By Balaji

கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, மாவட்ட ஆட்சியர் அளித்த பதக்கத்தைத் தனக்கு உதவிய இளைஞர்களுக்கு அணிவித்து, அவர்களை நெகிழவைத்திருக்கிறார் குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன்.

குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு முன்முயற்சிகளை செய்துவருகிறார். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது வெளியில் வருபவர்களை கனிவாகப் பேசி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். குளித்தலை பகுதியில் உள்ள 40 தன்னார்வ இளைஞர்களை இணைத்துக்கொண்டு, அவர்களின் உதவியோடு கொரோனா தடுப்புப் பணிகளைச் சிறப்பாக செய்துவந்தார். ஸ்பான்ஸர்கள் பிடித்து, இதுவரை 4,000 பேர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கியிருக்கிறார். அதோடு, 2,000 பேருக்கு முகக்கவசங்கள் வழங்கியிருக்கிறார். கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ADVERTISEMENT

அதேபோல், கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நின்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள், காய்கறி, உணவு என்று வழங்கி அவர்களை அரவணைத்தார். அய்யர்மலையில் உணவின்றி தவித்த நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு தினமும் வாழைப்பழங்களை உணவாகக் கொடுத்தார். குளித்தலையில் உள்ள 24 வார்டுகளிலும் பொது இடங்களில் கூடும் மக்களை, கொரோனா பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உறுதிமொழியை எடுக்கவைத்து, குளித்தலையில் கொரோனா நோய் பரவுவதைத் தடுத்தார்.

இப்படி கொரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய கார்த்திகேயனுக்கு, 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார். தனக்குக் கிடைத்த அந்தப் பதக்கத்தைதான், தன்னோடு இணைந்து களப்பணியாற்றிய 40 இளைஞர்களையும் அழைத்து, எல்லோரது கழுத்திலும் தனித்தனியாக அணிவித்து, ‘இந்தப் பதக்கம் உங்களால்தான் எனக்குக் கிடைத்தது’ என்று கூறி, அந்த இளைஞர்களை நெகிழவைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள கார்த்திகேயன், “குளித்தலை பகுதி மக்களிடம் தொடர்ந்து டிராஃபிக் விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இப்போது கொரோனா வந்ததால், அதுபற்றிய விழிப்புணர்வை குளித்தலை நகரம் மட்டுமன்றி, சுற்றியுள்ள கிராம மக்களிடமும் ஏற்படுத்தி வருகிறோம். அதற்கு, எனக்கு உறுதுணையாக இருந்து உதவியது இந்த இளைஞர்கள்தாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த உபகாரத்தை செய்தார்கள். ‘நம்ம மக்களுக்கு எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது’ என்று ஒவ்வோர் இளைஞரும் உள்ளுக்குள் பதைப்போடு, இந்தக் காரியத்தில் என்னோடு கைகோத்து செயல்பட்டார்கள். அதனால், நிறைய நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்ய முடிந்தது.

அதற்கு அங்கீகாரமாக, 74ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, எனக்கு மாவட்ட ஆட்சியர் கையால் பதக்கமும் சான்றிதழும் கிடைத்தது. இதற்கு உண்மையில் தகுதியானவர்கள், இந்தப் பாராட்டுக்குரியவர்கள் இந்த 40 இளைஞர்கள்தாம். அதனால், அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்கள் ஒவ்வொருவரின் கழுத்திலும் இந்தப் பதக்கத்தை அணிவித்து, அவர்களை வாழ்த்தினேன். இதுபோல் துடிப்பான, செயலில் அர்ப்பணிப்பான இளைஞர்கள் கிடைத்தால், எதையும் சாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

காவல் ஆய்வாளர் கார்த்திகேயனின் இந்தச் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துவருகிறார்கள்.

**ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share