இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, கன மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற தவறியது.
இதனைதொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஓவல், கான்பெரா இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது.
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா (19), சுப்மன் கில் (37*), சூர்யகுமார் யாதவ் (39*) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வலுவான தொடக்கத்தைப் பெற்றது.
எனினும் ஆட்டத்தின் போது ஒருமுறை மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஓவர்கள் 18 ஆகக் குறைக்கப்பட்டது.
மழைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியபோது, இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் பலத்த மழை பெய்தது. நீண்ட நேரமாகியும் மழை நிற்காததாலும், ஆடுகளம் விளையாட உகந்த நிலையில் இல்லாததாலும், நடுவர்கள் போட்டியை முடிவின்றி கைவிடுவதாக அறிவித்தனர்.
இதனால், இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இப்போது நான்கு போட்டிகள் கொண்ட தொடராகக் குறைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனால் ரசிகர்கள் சோகம் அடைந்தாலும், அவர்களை உற்சாகம் அடையும் வகையில் ரோகித் சர்மாவின் சாதனை அமைந்துள்ளது.
ஐசிசி இன்று வெளியிட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் 781 புள்ளிகளுடன் இந்திய வீரர் ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 202 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் (121 நாட் அவுட்) மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். இந்தப் பிரமாதமான ஆட்டமே அவரது புள்ளிகளை உயர்த்தியுள்ளது.
இதன்மூலம் 38 வயதை எட்டிய ரோகித் சர்மா, ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த மிக வயதான வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் தரவரிசையில் 38 வயதில் முதலிடம் பிடித்ததே அதிக வயதில் ஒரு இந்தியர் பெற்ற சாதனையாக இருந்தது.
