இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மழையின் குறுக்கீட்டால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி முடித்துள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
மேலும், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று (ஜூலை 29) தொடங்கிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பல்வேறு மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியது.
அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அணியில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மேலும், இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துகிறார்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
அதில், அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 55 பந்துகளில் 1 சிக்சர் 6 பவுண்டரிகள் உட்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சுப்மன் கில் 39 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார்.
அவரைத்தொடர்ந்து அக்ஸர் படேல் 1 ரன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 7 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
பின்னர், சூர்ய குமார் யாதவ் களமிறங்கிய போது மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்திருக்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
