IND vs USA: சிவம் துபே செய்த செயல்: அப்செட்டான ரோஹித் – என்ன ஆச்சு தெரியுமா?

Published On:

| By indhu

IND vs USA: Shivam Dube's action - Upset Rohit - Do you know what happened?

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் சிவம் துபே செய்த செயலால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அப்செட்டாகி உள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 12) நடைபெற்ற போட்டியில் இந்திய – அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கில் இந்திய அணி களமிறங்கியது.

ஆனால், டி20 உலகக்கோப்பை நடப்பு தொடரில் இந்திய அணியில் ரிங்கு சிங் இடத்தை தட்டிப் பறித்த சிவம் துபே ஆல்-ரவுண்டர் என்ற அடையாளத்துடன் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.

இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் சிவம் துபே சரிவர விளையாடவில்லை. அதேவேளையில் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவிற்கு எதிராக நேற்று (ஜூன் 12) நடைபெற்ற போட்டியில் சிவம் துபேவிற்கு பந்துவீசும் வாய்ப்பு அளித்தார் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால், அவர் பந்துவீசிய ஒரு ஓவரிலேயே 14 ரன்களை விட்டுக்கொடுத்து இந்திய அணி கேப்டனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

பின்னர், 111 ரன்கள் என்ற இலக்கை அடைய இந்திய அணி விளையாடிய போது 8-வது ஓவரில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சிவம் துபே களமிறங்கினார். களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து பேட்டிங் செய்தார்.

பல ஓவர்கள் கழித்தும் கூட ஒரு பந்தை கூட சிவம் துபே சரியாக அடிக்காத நிலையில், அவர் ஷாட் அடிக்க வேண்டும் என நினைத்த எந்த பந்தும் பேட்டிலேயே சிக்கவில்லை. இப்படி தனது மோசமான ஆட்டத்தை சிவம் துபே அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெளிப்படுத்தினார்.

14 ஓவர் வரை அவர் 24 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில், அவரது பேட்டில் எட்ஜ் ஆகி சென்ற ஒரு ஃபோர் மட்டுமே அவர் அடித்த ஒரே ஒரு பவுண்டரியாகும்.

அவரது மோசமான பேட்டிங்கை பார்த்து வெளியில் அமர்ந்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் அப்செட்டான மனநிலையில் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது.

இந்த நிலையில் 15வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து தன்னம்பிக்கையை பெற்றார் சிவம் துபே. நல்ல வேளையாக அதற்கு அடுத்த ஓவரில் அமெரிக்காவுக்கு ஐந்து ரன்கள் பெனால்ட்டியும் கொடுக்கப்பட்டது.

அதனால், அமெரிக்க வீரர்கள் துவண்டு போன நிலையில் இருந்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்.

பின்னர் 18.2 ஓவர்களில் இந்திய அணி 111 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. சிவம் துபே 35 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இருந்தார். சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் சிவம் துபேவின் ஆட்டம் ரோஹித் சர்மாவை அப்செட் செய்ததால், அடுத்த போட்டியில் சிவம் துபே களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவைக்கு இப்போது முப்பெரும் விழாதான் முக்கியமா? – அண்ணாமலை கேள்வி!

மொபைல் எண்களுக்கும் இனி கட்டணம்: டிராய் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share