IND vs ENG: புதிய சாதனைகளை அடித்து நொறுக்கிய அஸ்வின், ரோகித் சர்மா

Published On:

| By christopher

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இன்றைய நாள் முடிவில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் இருவரும் புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை சேர்த்தது.

அந்த அணி தரப்பில் ஜோ ரூட் (122 ரன்கள்), ஓலி ராபின்சன் (58 ரன்கள்), பென் ஃபோக்ஸ் (47 ரன்கள்) மற்றும் ஜாக் கிராவ்லி (42 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்தியாவை தாங்கிய ஜூரல்

இதை தொடர்ந்தது களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கம் அளித்தபோதும், மறுமுனையில் முக்கிய ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, 177 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து, இந்திய அணி மோசமான நிலைக்கு சென்றது.

இன்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தில் இளம் வீரரான துருவ் ஜூரேல் தனது முதல் சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இத்னால் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 307 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் அதிகபட்சமாக 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

கும்பிளே சாதனை முறியறித்த அஸ்வின்

தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 60 ரன்களுடன் சிறப்பான துவக்கத்தை அளித்தார்.

எனினும் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சில் சிக்கி, 145 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம், இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்கள் எடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராக அணில் கும்ப்ளே ( 350 விக்கெட்)  இருந்த நிலையில், தற்போது அஸ்வின் (354 விக்கெட்*) அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும், இந்த போட்டியில் தனது 35வது 5 விக்கெட் ஹாலை கைப்பற்றிய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5-விக்கெட் ஹாலை கைப்பற்றிய இந்தியர் என்ற அணில் கும்ப்ளேவின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

ரோகித் சர்மா சாதனை!

தொடர்ந்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் குவித்துள்ளது.

ரோகித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வல் 16 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்த 24 ரன்கள் மூலம், இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை ரோகித் சர்மா சேர்த்துள்ளார். அதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4,000 ரன்களையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற இன்னும் 152 ரன்கள் தேவை என்ற நிலையில், நாளை நடைபெறவுள்ள 4ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இலக்கை எட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா, மகிழ்

”விஜயதரணி போன்று கோவையிலும் விக்கெட் விழப்போகிறது” : அண்ணாமலை

Ranji Trophy : 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் தமிழ்நாடு அணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share