இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில், இந்த தொடரின் 4-வது போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ind vs eng india ranchi test
இப்போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி 42 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கம் அளித்தார். மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜோ ரூட்டின் அபார சதத்தால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்துக்காக ஜோ ரூட் 122 ரன்கள், ஓலி ராபின்சன் 58 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் சேர்த்திருந்தனர். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு, முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா, ரஜத் படிதார், ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான் உள்ளிட்டோர் ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், யசஸ்வி ஜெய்ஸ்வால் (73 ரன்கள்), துருவ் ஜூரேல் (90 ரன்கள்), சுப்மன் கில் (38 ரன்கள்), குல்தீப் யாதவ் (28 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களை சேர்த்தது.
46 ரன்கள் முன்னிலையுடன், 2-வது இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, ரவிச்சந்திரன் அஸ்வின் (5 விக்கெட்டுகள்), குல்தீப் யாதவ் (4 விக்கெட்டுகள்), ரவீந்திர ஜடேஜாவின் (1 விக்கெட்) சுழற்பந்து கூட்டணி, பெரும் அதிர்ச்சி அளித்தது.
ஜாக் கிராவ்லி மட்டும் 60 ரன்கள் எடுக்க, மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால், இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து, 192 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் சர்மா 55 ரன்கள் விளாசி சிறப்பான துவக்கம் அளித்தார். ஆனால், ரஜத் படிதார், ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
என்றாலும் பொறுப்பாக விளையாடிய சுப்மன் கில் 52 ரன்களும், துருவ் ஜூரேல் 39 ரன்களும் சேர்க்க, இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 3-1 என இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 17-வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டியின், முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள், 2-வது இன்னிங்ஸில் 39 ரன்கள் சேர்த்து, அபாரமாக 3 கேட்சுகளையும் பிடித்த துருவ் ஜூரேல், ‘ஆட்ட நாயகன்’ விருதினை வென்றார்.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக உடன் தமாகா கூட்டணி: அதிமுக ரியாக்ஷன்!
ரீ-ரிலீஸ் ஆகும் அஜித்-விஜயின் ‘சூப்பர்ஹிட்’ படங்கள்
ind vs eng india ranchi test