”பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லும் அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர்தான் தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சராக இருக்கிறார்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மாத இறுதியில் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கும் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு இணையம் இன்று (நவம்பர் 4 ) உத்தரவிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், ”இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, உற்பத்தி விலை ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
இதில், “எருமைப்பால் 41ல் இருந்து 45க்கு உயர்த்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் பயன்படுத்தப்படக்கூடிய ஆரஞ்சு கலர் ஃபுல் க்ரீம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஆவின் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதே விலையே தொடரும்.
வணிகரீதியான பயன்பாட்டிற்கு வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்தார். மேலும் ”வரலாற்றில் இல்லாத நிகழ்வாக மோடி தலைமையிலானமத்திய பாஜக அரசு பாலிற்குகூட ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. அதனால் பாலின் விற்பனை விலை உயர்கிறது” என்று கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய்க் கோளாறினால்தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கித் தவிக்கிறது.
பாலுக்கு GST வரி விலக்கு இருப்பதுகூட தெரியாதவர்தான் திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர். பொறுப்பற்ற முறையில் பொய்களைச் சொல்லாமல் பால் விலை உயர்வை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு இணையம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யும் வகையில் விலை மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்களின் நலன் கருதி தான் இந்த விலை மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்று கூறியுள்ளது.
ஆனால், பால்வளத்துறை அமைச்சர் நாசர், “பாலிற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வினால் பாலின் விற்பனை விலை உயர்கிறது” என்று கூறியிருப்பது, விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இதனால், பால்வளத்துறை அமைச்சர் நாசரும் ஆவின் நிறுவனமும் வேறு வேறு பாதைகளில் பயணிக்கின்றார்களா என்ற சந்தேககம் மக்களிடம் எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
