காங்கிரஸை தொடர்ந்து, 11 கோடி ரூபாய் வரிபாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை இன்று (மார்ச் 29) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான பணிகள் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆத் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கதுறை கைது செய்துள்ளது.
ரூ. 1800 கோடி அபராதம்!
அதற்கு முன்னதாக 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் 4 வங்கிக்கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது.
தொடர்ந்து கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமானவரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறி, அதற்கு அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித் துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பான் கார்டு காரணம்?
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் கார்டைப் பயன்படுத்தியதற்காக, 11 கோடி ரூபாய் வரிபாக்கி செலுத்தக் கோரி, இந்தியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் இன்று அனுப்பியுள்ளது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக அக்கட்சி சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/SaketGokhale/status/1773601417896591635
72 மணி நேரத்தில் 11 ஐடி நோட்டீஸ்!
அதே போன்று கடந்த 72 மணி நேரத்தில் 11 வருமான வரித்துறை நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகாய் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ கடந்த 72 மணி நேரத்தில் பல்வேறு ஆண்டுகளை குறித்து மொத்தம் 11 வருமான வரித் துறை நோட்டீஸ் கிடைத்துள்ளன.
தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவோம் என்று மோடி அரசு வெளிப்படுத்த மறுப்பது வேடிக்கையாக உள்ளது.
மக்களவை 2024 தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ED வேலை செய்யாதபோது, IT துறையைப் பயன்படுத்துகிறது.
ஏன் இவ்வளவு அவநம்பிக்கை மோடி?” என்று கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விதி மீறியதா ராஜஸ்தான்? ரிக்கி பாண்டிங் கோபத்தில் கத்தியது ஏன்? : விளக்கம்!