ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்த ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தில் இருந்து வரி பிடித்தம் செய்த பின்பு தான் சம்பளத்தை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
ஆனால் வரிபிடித்தம் செய்த தொகையை ஞானவேல்ராஜா வருமான வரித்துறைக்கு திரும்ப செலுத்தாததால், சிவகார்த்திகேயனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.12 லட்சத்தை வருமான வரித்துறையினர் எடுத்துக் கொண்டனர்.
இதனை அடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் “நான் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக 2018 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.15 கோடி சம்பளம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்தார். 2019ஆம் ஆண்டு மே மாதம் படம் வெளியான நிலையில், எனது சம்பள தொகையில் வருமான வரியை ஞானவேல் ராஜா பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகையை எனக்கு வழங்கினார்.
ஆனால் பிடித்தம் செய்த வரியை வருமான வரித்துறைக்கு அவர் செலுத்தவில்லை. இதன் காரணமாக வருமான வரி பிடித்தத்தை எனது வங்கி கணக்கில் இருந்து வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இந்த தொகையை திரும்ப வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என சிவா தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது இந்த வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
’தை மகள் வழி காட்டுவாள்’ : எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் எடப்பாடி கடிதம்!