கோபமாகத் திரும்பி….. சந்தோஷத்தில் மிதந்த ரஜினி

Published On:

| By Minnambalam Desk

Rajini film Moondru Mugam

அஸ்தி என்கிற மலையாளப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங்குக்காக சென்னையிலுள்ள கே பாலாஜியின் சுஜாதா டப்பிங் தியேட்டருக்கு வருகின்றனர் மலையாள நடிகர் பரத் கோபி மற்றும் உதவி இயக்குனர் அயூப் இருவரும்.

டப்பிங் நடக்கும்போது அயூப்பிடம் தியேட்டர் மேனஜர் வந்து, ”ரஜினி படமான மூன்று முகம் படத்தின் சில டப்பிங் வேலைகள் மிச்சம் இருக்கிறது. அவர்களுக்கு அவசரம். நீங்கள் கொஞ்சம் நேரம் உங்கள் டப்பிங்கை நிறுத்த வேண்டும்” என கேட்கிறார். ” பரத் கோபி டப்பிங் முடித்து விட்டு மாலை ரயிலுக்கு எர்ணாகுளம் செல்ல வேண்டும். அதனால் முடியாதே என்கிறார் அயூப்.

ADVERTISEMENT

விடாமல் மேனேஜர், “லஞ்ச் டைமாவது கொடுங்க. ரஜினி படம் ரீலீஸ் தேதி நெருங்கி விட்டது.” என்று சொல்ல, அயூப் பரத் கோபியோடு பேசிவிட்டு சம்மதிக்கிறார்.

டப்பிங் அறையில் ஆஷ்ட்ரே ஒன்று ரஜினிக்காக வைக்கப்படுகிறது. பரத் கோபி அடுத்த அறையில் சோபாவில் கண்ணயர, அயூப் காத்திருக்கிறார்.

ADVERTISEMENT

ரஜினி வந்து டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். லஞ்ச் டைமும் முடிந்து நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. பொறுமையிழந்த அப் கொஞ்சம் சங்கடத்தோடு டப்பிங் அறையின் கதவைத் திறக்கிறார். இருண்ட அறையில் பேசிக்கொண்டிருந்த ரஜினி, கதவு திறந்து வெளிச்சம் வந்ததால் கவனம் சிதற, கடும் கோபமாகி திரும்பி கதவைப் பார்க்கிறார்.

அறை வெளிச்சத்தின் இடையே அய்யூப் நின்றிருந்தாலும் முகம் இருட்டாக இருந்தாலும் ரஜினிக்கு அந்த உருவம் தெரிகிறது.

ADVERTISEMENT

“டேய்…அயூப்பா” எனச்சொல்லி ஓடி வந்து கைகளைப் பிடித்துக் கொள்கிறார் ரஜினிகாந்த். அயூப் ரஜினியோடு நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் ஒன்றாக படித்த சக மாணவர். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்குப் பிறகும் ரஜினி அதை மறக்காமல் இருக்கிறார் என்பது பெருங்கோபத்தில் இருந்து நொடியில் மாறிய ரஜினியின் மகிழ்ச்சியில் தெரிந்தது.

அயூப் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்திய நடிப்பு பயிற்சிக் கல்லூரியில் மாணவர். அயூப்பும் ஜேம்ஸ் என்பவரும் மலையாளப் பிரிவில் நடிப்புப் பயிற்சி கல்லூரிக்கு வந்தவர்கள்.

கன்னடப் பிரிவில் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த், நாராயண்ராவ் இவர்கள் தோழர்கள்.

இயக்குனர் ஸ்ரீனிவாசன், சிரஞ்சீவி இருவரும் இவர்களது ஜூனியர்கள். அயூப்பும், ரஜினியும் ஒரே அறையில் நெருங்கிய தோழர்கள்.

காரணம் இருவருமே வறுமை, காசு பற்றாக்குறையோடு படித்தவர்கள். மாதம் பிறக்கும் போது மணி ஆர்டர் எல்லோருக்கும் வரும். எல்லோரும் பியர் வாங்கி குடித்து பொழுதைக் கழிப்பார்கள். அயூப்பும், ரஜினியும் அறையிலேயே தங்கி வறுமை பேசிக் கொண்டிருப்பார்கள். ராகிங் செய்வதில் ரஜினி கில்லாடியாம்.

கே.பாலசந்தர் ரஜினியை அபூர்வராகங்கள் படத்துக்கு தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில், ப்ரியமுள்ள ஸோஃபியா என்ற மலையாளப் படத்தில் படத்தில் அயூப்புக்கும் ஒரு சிறிய வேடம் கிடைக்கிறது.

அமிஞ்சிக்கரை அருண் ஹோட்டலிலிருந்து அயூப் பும், ரஜினியும் ஷுட்டிங்குக்கு போனார்கள். அபூர்வ ராகங்கள் ரிலீசுக்கு முன்பு அதன் ப்ரிவியூ காட்டப்படுகிறது. அயூப் பும் படத்தைப் பார்க்கிறார்.

சினிமா பார்த்து விட்டு அறைக்கு வந்ததும், “இனி நீ தைரியமாக உன் கண்டக்டர் வேலையை ராஜினாமா செய்யலாம்” என்கிறார் அயூப்.

ஆனால் ரஜினியோ, “இன்னும் படமே ரிலீஸ் ஆகவில்லை. அதற்கும் முன்னே வேலையை விட்டால்…. ” என்று பயப்படுகிறார்.

“இனி எப்போதுமே உனக்கு அந்த வேலைக்கு போகும் நிலைமை வராது. போகவும் கூடாது. இந்தப் படம் உனக்கு பெரிய ப்ரேக்.” என்று அயூப்பே ரஜினியை ராஜினாமா கடிதம் எழுதச் சொல்லி கையெழுத்து வாங்கி, அயூப்பே போஸ்ட்டும் செய்கிறார்.

ரஜினியை அடுத்து மூன்று படங்களுக்கு பாலச்சந்தர் ஒப்பந்தம் செய்ய, ரஜினி அருண் ஹோட்டலை காலி செய்து விட்டு வேறு இடத்துக்கு போகிறார்.

அன்று பிரிந்த ரஜினியை சுஜாதா டப்பிங் தியேட்டரில் சந்திக்கும் வாய்ப்பு.

இரண்டு குவளைகளில் ஜூஸ் ஊற்றச் சொல்லி கொடுத்த ரஜினி அயூபின் வேலைகளை விசாரிக்கிறார். தன் முகவரியை கொடுத்து தன்னை சந்திக்க சொல்கிறார். தன் முதல் ஹிந்திப் படம் அந்தா கானூன் ரிலீசாக இருப்பதாகவும் அது ஜெயித்தால் இந்தியா முழுதும் அறியப்படும் நடிகனாவேன். தோற்றால் தமிழ்நாட்டோடு சுருங்கி போவேன்” என ரஜினி சொல்ல “நீ ஜெயிப்பாய்” என அயூப் அவரை வாழ்த்துகிறார்.

ஆனால் பிறகு அயூப் ரஜினியை சந்திக்கவேயில்லை.. காரணம் தெரியவில்லை.

நடிப்புக்கு கல்லூரியில் ரஜினி பாஸ் மார்க் எடுத்தார்.. அயூப் First class ல் தேர்ச்சி பெற்றார்.

சினிமா விசித்திரமானது!

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share