மராட்டிய மாநிலத்தில் புதிதாக 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
ஆட்சியமைத்து ஒரு மாதம் ஆன நிலையில் பாஜக, அதிருப்தி சிவசேனா (ஏக்நாத்) கூட்டணி அரசில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்ட பிறகு முதல்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
சிவசேனா சார்பில் 9 பேரும், பாஜக சார்பில் 9 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் 18 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷாரி.

சிவசேனா கட்சியின் (ஏக்நாத்) தாதா பூஸ், ஷம்புராஜே, சந்தீபன், உதய், தானாஜி, அப்துல் சத்தார், தீபக் கெர்செகர், குலாப்ராவ், சஞ்சய்யும், பாஜக சார்பில் சந்திரகாந்த், சுதிர், கிரிஷ் மகாஜன், சுரேஷ் காடே, ராதாகிருஷ்ண பாட்டில், ரவீந்திர சவான், மங்கல் லோதா, அதுல் சாவே ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
மராட்டிய மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது… ஆனால் தேர்தலுக்கு பின்னர் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டேவே உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேருடன் சேர்ந்து பாஜனதாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார்.

அரசு கவிழ்ந்தது
இதனால் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிபுரிந்த உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனாவின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.
மராட்டியத்தின் முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். ஆனால் புதிய அமைச்சரவை அமைக்கப்படாமல் இருந்தது மராட்டிய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில்தான் தற்போது புதிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுண்டா? கே.எஸ். அழகிரி கேள்வி!
