மோடி இன்று (ஜூன் 9) மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.
இன்று மாலை 7:15 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமர் நேருவை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் பிரதமர் மோடியுடன், இன்று மத்திய அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
தற்போது அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி மற்றும் முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சௌஹான், பசவராஜ் பொம்மை, மனோகர்லால் கட்டார், சர்ப்பானந்தா சோனாவால், குமாரசாமி ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து மோகன் நாயுடு மற்றும் பெம்மாசனி சந்திரசேகர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில் அண்டை நாட்டு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதை முன்னிட்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, செஷல்ஸ் துணை அதிபர் அகமது ஆகியோர் ஏற்கனவே டெல்லி வந்து விட்ட நிலையில், நேபால் பிரதமர் பிரசந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, மொரிசியஸ் அதிபர் பிரவீன்குமார் ஜெகநாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் தாபே ஆகியோர் வருகை தரவுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு நடந்த பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களும் 2014 ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று இருந்தனர்.
அதேசமயம் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
திரிணமுல் காங்கிரஸ் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.
மறுபக்கம் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி மற்றும், சதைவ் அடல் பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடங்களிலும், தேசியப் போர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
அப்போது மோடியுடன் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் தயார்: அமைச்சர் பெரியகருப்பன்