2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்; சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்பதுதான் எங்கள் லட்சியம். தமிழகம் முழுவதும் இதுவரை 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளேன்.
இந்த மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, 52 மாத மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற உணர்வை அவர்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், தங்களுக்கு நல்லது நடக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.
அதிமுக- பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு தேர்தலில் ஆளும் திமுகவுக்கும் அதிமுகவுக்கு இடையே மட்டும்தான் போட்டி.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பலத்துடன் வென்று தனித்து ஆட்சியைக் கைப்பற்றும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேயாதான் போட்டி என நடிகர் விஜய் பேசியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
